தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ் பி வேலுமணி போட்டி…!
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் 23 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது.
இன்று மாலை அஷ்டமி துவங்கும் நிலையில் முன்கூட்டியே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் பெரும்பாலானவர்கள் இடம் பெற்றுள்ளனர். எடப்பாடி தொகுதியில் எடப்பாடி யார் போட்டியிடுகிறார். கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் வழக்கம்போல் மண்ணின் மைந்தனான எஸ் பி வேலுமணி போட்டியிடப் போகிறார் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்த முதல் கட்ட பட்டியல் வெளியான நிலையில் தொண்டாமுத்தூர் மற்றும் பல்வேறு பகுதியில் உள்ள அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது:
அதிமுக வட்டாரத்தில் முக்கிய விஐபிகள் போட்டியிடும் தொகுதிகள் மிகச் சரியாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த தொகுதிகளில் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அடுத்த கட்ட பட்டியல் விரைவில் வெளியாகும்.
அதிலும் கொங்கு மண்டலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். தொண்டாமுத்தூர் தொகுதி ஏற்கனவே அதிமுக கோட்டையாக இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் ஏகப்பட்ட துன்பங்களை அனுபவித்து விட்டார்கள்.
எனவே முன்னைவிட எஸ்பி வேலுமணி அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டு வித்தியாசம் இருக்கும் வகையில் அவரது வெற்றி சரித்திரமாக இடம்பெறும். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் பிரச்சார பணி விரைவாக துவக்கப்படும். கொங்கு தளபதி வேலுமணி தொகுதியில் கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக தொடர்ந்து பிரகாரம் செய்வார்கள் என்றனர்.
