கோவை காப்பகத்தில் மாணவர் மீது தாக்குதல்; கலெக்டரிடம் புகார்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுங்கம் பகுதியை சேர்ந்த காவியா என்பவர் இன்று புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் எனது மகன் ரித்திக்ராஜ் தங்கியிருந்து படித்து வந்தான். இந்த நிலையில் எனது மகனை கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டிற்கு அழைத்து வந்தேன். அப்போது அவனது உடலில் காயங்கள் இருந்தது.
இதுகுறித்து அவனிடம் விசாரித்த போது, காப்பகத்தில் இருந்த 2 மாணவர்கள் தன்னை தாக்கியதாக தெரிவித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் காப்பக நிர்வாகிகளிடம் இதுகுறித்து கேட்டேன். அவர்கள் அதற்கு முறையாக பதில் அளிக்கவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், பதுவம்பள்ளியை சேர்ந்த பாபு நேசன் என்பவர் அளித்த மனுவில், என் மகன் கருமத்தம்பட்டியில் உள்ள காப்பகத்தில் தங்கியிருந்து படித்து வருகிறார். சம்பவத்தன்று எனது மகனை அங்குள்ள 2 மாணவர்கள் தாக்கி காயப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார். இந்த புகார் மனுகள் குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
