ஊட்டி பஸ் எப்ப வருமோ… கடுப்பில் காத்திருக்கும் பயணிகள்..

கோவை மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் கடந்த 2010ம் ஆண்டு 8 கோடி ரூபாய் செலவில் கட்டி திறக்கப்பட்டது.

கோவையிலிருந்து மேட்டுப்பாளையம், நீலகிரி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், முதுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கும் வகையில் இந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் துவக்க காலம் முதலே பஸ்கள் இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து முறையாக இயக்கப்படவில்லை.

குறிப்பாக கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் வராமல் வெளியே நின்று பயணிகளை ஏற்றி செல்வது வாடிக்கையாகிவிட்டது. டவுன் பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்குள் வராமல் எம்ஜிஆர் மார்க்கெட் முன்பாகவே பயணிகளை ஏற்றி இறக்கி சென்று வருகிறது. பல கோடி ரூபாய் செலவு செய்து பஸ் ஸ்டாண்ட் கட்டியும் எந்த பயனும் இல்லாமல் இருக்கிறது.

ஊட்டி குன்னூர் கோத்தகிரி செல்லும் சில பஸ்கள் மட்டும் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து பயணிகளை ஏற்றி செல்கிறது. பஸ் ஸ்டாண்டில் ஒரு பகுதி எந்த பயன்பாடும் இன்றி கிடக்கிறது.

மேலும் பஸ் ஸ்டாண்டுக்குள் முறையான பராமரிப்பு பணிகளும் நடக்கவில்லை. பஸ் ஸ்டாண்டில் கிழக்கு பகுதியில் பொதுமக்கள் சென்று வரவே தயக்கம் காட்டும் அளவிற்கு பரிதாபமான நிலைமையில் இருக்கிறது. குப்பைகளும் செடிகளும் வளர்ந்து காணப்படுகிறது. பஸ் ஸ்டாண்டை சீரமைக்க வேண்டும். அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். கழிவறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை போன்ற வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். ஊட்டி, குன்னூர், கோத்தகிரிக்கு செல்ல போது போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை. நேற்று பயணிகள் பலர் கூட்டமாக ஊட்டி செல்லும் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

ஆனால் பஸ்கள் வரவில்லை. ஓரிரு பஸ் வந்த போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போதவில்லை. அருகே பஸ் போக்குவரத்து அலுவலகம் இருந்தும், புகார் தெரிவித்தும் கூடுதல் பஸ்கள் விடவில்லை. ஊட்டிக்கு செல்லும் பஸ்கள் டீசல் விலை உயர்வு காரணமாக கணிசமாக ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது. பஸ்களை குறைத்து விட்டதால் பயணிகள் தவிப்படைந்துள்ளனர். ஏழை பயணிகள் பஸ்சுக்காக காத்திருப்பது தெரிந்தும் போக்குவரத்து கழகம் அலட்சியமாக இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *