போலீஸ் வாங்கிய லஞ்ச பணத்தை தர சொல்லுங்க… கோவையில் விவசாயிகள் புகார்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: கடந்த வாரம் கோவில்பாளையம் பகுதி விவசாய தோட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை செய்தார்கள். நீரா பானம், கள் விற்பனை செய்தால் அதற்கு லஞ்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் கேஸ் போடுவோம் என மிரட்டியுள்ளார்கள். நேரடியாக தோட்டங்களுக்கு சென்று மாமூல் கேட்கிறார்கள்.
4 தோட்டத்தில் இப்படி போய் பணம் வசூலித்திருக்கிறார்கள். ஒவ்வொரு விவசாயிடம் 2500 ரூபாய் என 4 பேரிடம் பணம் வசூலித்தார்கள். இந்த பணத்தை விவசாயிகளுக்கு திருப்பி தர வேண்டும். மேலும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரளா, கர்நாடகாவில் கள் விற்கிறார்கள். அங்கே எந்த நடவடிக்கையும் இல்லை. இங்கே தான் இப்படி பிரச்னை இருக்கிறது. விவசாய தோட்டத்திற்குள் போலீசார் செல்ல கூடாது, போலீசார் தொந்தரவு செய்வதால் தொழிலாளர்கள் வேலைக்கு வர பயப்படுகிறார்கள். டாஸ்மாக் முதலாளிகள் அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு கள் பயன்படுகிறது. தவெக ஆட்சி நீட்டிக்க வேண்டும் என்றால் கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.” என்றனர்.
