விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் தயாரிப்பு தீவிரம்
கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் பக்தர்கள் வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். தவிர, பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் இந்து அமைப்பினர் மூலம் வைத்து பிரதிஷ்டை செய்யப்படும்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், சுண்டக்காமுத்தூர், செல்வபுரம், தெலுங்குபாளையம், புட்டுவிக்கி சாலை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதில், சிங்கம், புலி, யானை வாகனத்தில் விநாயகர், ராஜகணபதி உள்பட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சிறிய மற்றும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. களிமண் எடுத்துவரப்பட்டு அச்சு மூலம் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
விநாயகர் சதுர்த்திக்கு ஒரு மாதம் உள்ள நிலையில், தற்போது முதலே ஆடர்கள் வந்து கொண்டு இருப்பதாக சிலை தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து சிலை தயாரிப்பாளர்கள் கூறியதாவது: தமிழக அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி சிலைகள் தயாரித்து வருகிறோம். களிமண், கிழங்கு மாவு, ஓடக்கல் மாவு, பேப்பர் பொடி போன்றவற்றை பயன்படுத்தி சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்கள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு உள்ளது.
சிலைகள் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயம் வண்ணப்பூச்சுகள் பயன்படுத்தவில்லை. நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு இல்லாத இயற்கை சாயங்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு அனைவரையும் கவரும் வகையில் பல புதுவிதமான விநாயகர் சிலைகளை வடிவமைத்து உள்ளோம். அரசு 10 அடிக்கு மேல் சிலைகள் செய்ய கூடாது என அறிவுறுத்தி இருப்பதால், அதற்கு ஏற்ப சிலைகளை செய்து உள்ளோம்.
சிலைகள் விற்பனை துவங்கியுள்ளது. ஆடர்களும் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் அதிகளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம்.
