ரேஷனில் சர்வர் முடக்கம்…அரிசி வாங்க வந்த பெண்கள் ஆவேசம்

கோவை மாவட்டத்தில் பாயிண்ட் ஆப் சேல் கருவி சர்வர் முடக்கத்தால் ரேஷன் பொருட்கள் வினியோகம் முடங்கியது. அரிசி வாங்க வந்த பெண்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டத்தில் 1,405 ரேஷன் கடைகள் உள்ளன. மாவட்ட அளவில் சுமார் 11.60 லட்சம் ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் கருவி சர்வர் மக்கர் செய்கிறது. நேற்றும் பெரும்பாலான ரேஷன் கடைகளில் சர்வர் இயங்கவில்லை. ஒரு மணி நேரம் போராடினாலும் 2 முதல் 3 பேருக்கு மட்டுமே பொருள்கள் வழங்க முடிந்தது. கைரேகை பதிவு பணியும் தாமதம் ஆனது. சர்வர் பெயிலியர் ஆனதால், அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வரிசையில் நின்ற பெண்கள் கோபம் அடைந்தனர். பீளமேடு, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் எவ்வளவு நேரம் காத்துக்கிடப்பது? வேலைக்கு போக வேண்டாமா? நீங்க என்னதான் செய்யுறீங்க? ரோட்டுல போராட்டம் செய்யணுமா? எனக்கேட்டு வாக்குவாதம் செய்தனர். மேலும் சில பெண்கள் ரேஷன் கடை முன் அமர்ந்து பொருட்கள் வாங்காமல் செல்ல மாட்டோம் என அடம் பிடித்தனர்.

சர்வர் வேலை செய்தால்தான் பொருட்கள் விநியோகம் செய்ய முடியும் என ரேஷன் ஊழியர்கள் கூறினர். ஆனால், இதை பெண்கள் ஏற்கவில்லை. பல பெண்கள், ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதுதடி..’ என ரீல்ஸ் போட்டு கலக்கினர். இன்னும்சிலர், ஸ்டேட்டஸ் வைத்து, தங்களது குமுறலை வெளிப்படுத்தினர். இதுபற்றி தமிழக ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், “ரேஷன்’ கடை சர்வர் தனியார் நிறுவனம் மூலம் பராமரிக்கப்படுகிறது. அந்த நிறுவனத்திடம் பேசி, விரைவாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயோமெட்ரிக் கருவி பயன்பாடு சரியாக செய்யாத அந்த நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆர்டர் தரக்கூடாது. கடந்த சில ஆண்டுகளாக இந்த பிரச்னை தொடர்கிறது. சர்வர் நிறுவனத்தை யாரும் கேள்வி கேட்பதில்லை, மாறாக, ரேஷன் கடை ஊழியர்கள் மீதுதான் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *