டெங்கு கொசுக்களை அழிக்க 10 ஆயிரம் கம்பூசியா மீன்கள்…
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக, மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 20 வார்டுகளில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் கொசுப்புழு ஆய்வு பணிகளின் அடிப்படையில் கொசுப்புழு பெருக்கம் அதிகம் காணப்படும் பகுதிகளை கண்டறிந்து இன்று ஒரே நாளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணிகளை செய்தனர்.
ஒவ்வொரு நாளும் மாநகராட்சி பகுதிகளில் சராசரியாக 33 இடங்களில் நடக்கும் இம்முகாம்களில் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் கண்டறியப்பட்டால், அப்பகுதியில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், மலேரியா, டெங்கு கொசுக்களை அழிக்கக்கூடிய கம்பூசியா மீன்கள் மாவட்ட சுகாதார அலுவலகம் மற்றும் கல்வீரம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆண் மீன் சிறியதாகவும், பெண் மீன் பெரியதாகவும் இருக்கும். ஒரு கிணற்றில் 2 ஆண், 8 பெண் மீன் என்ற விகிததத்தில் விடப்படும். வளர்ந்த மீன் 100 முதல் 300 கொசு புழுக்களை உண்ணும், இத்தகைய மீன் விடப்பட்ட கிணறு மற்றும் நீர்நிலைகளில் பிளீச்சிங் பவுடன் மற்றும் ஆயில் போன்றவற்றை தெளிக்கக்கூடாது. இதன் வாழ்நாள் ஒரு ஆண்டு ஆகும். இதற்காக 10 ஆயிரம் மீன்கள், மாநகர் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் விடப்படும்.
இதற்காக மாநகராட்சியில் சிறிய பிளாஸ்டிக் டப்பாக்களில் இந்த மீன்கள் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பணியில் 1,200 கொசு ஒழிப்பு பணியாளர்கள், 60 சுகாதார ஆய்வாளர்கள், 5 மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் 21 துப்புரவு ஆய்வாளர்கள் அடங்கிய தனிக்குழு ஈடுபட்டுள்ளது.
