டாஸ்மாக் பாட்டில்களில் மோசடி…
கோவை கலால் மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் 915 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகள் கட்டுப்பாடின்றி அதிகமாகி விட்டது. மதுபான பாட்டில்களை தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து டாஸ்மாக் குடோன்களுக்கும், |குடோன்களிலிருந்து விற்பனை கடைகளுக்கும் கொண்டு செல்லும் சில பாட்டில்கள் உடைந்து விடுகிறது.
சில மதுபான கடைகளில், ஹாலோ கிராம் சீல், பாட்டில் திரும்ப பெறும் ஸ்டிக்கர் இருப்பதில்லை. இந்த முத்திரை இல்லாத பாட்டில்கள் போலியாக இருக்கும் சந்தேகம் இருக்கிறது. டாஸ்மாக் மதுபானம் அல்லாத போலி மதுபானங்கள் விற்பதாகவும் புகார் கூறப்படுகிறது. மதுபானங்களுக்கு உரிய விலை காட்டிலும் கூடுதல் தொகை தொடர்ந்து வசூலிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
மதுபானங்கள் விற்ற தொகையை டாஸ்மாக் வங்கி கணக்கில் சேர்க்காமல் மோசடி செய்வதும் அடிக்கடி நடக்கிறது. மோசடி, முறைகேட்டினால் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. டாஸ்மாக் மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், கலால் துறையினர் சோதனை நடத்தியும் இந்த மோசடிகள் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகத்தை கண்காணிக்க தணிக்கை பிரிவு துவக்கப்பட்டது.
மண்டல அலுவலகம், டிப்போ குடோன்கள், மாவட்ட அலுவலகங்கள், அனைத்து கடைகளும் தணிக்கை பிரிவினர் ஆய்வு நடத்த வேண்டும். ஆனால் தணிக்கை ஆய்வு முறையாக நடப்பதில்லை.
மதுபான கடைகளின் தினசரி விற்பனை, வருவாய், மதுபானங்கள் வரத்து தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். கொள்முதல் முறைகேடு இன்னும் தீரவில்லை. பல டாஸ்மாக் கடைகளுக்கு உரிய மதுபாட்டில்கள் சப்ளை செய்வதில்லை. கடைக்காரர்கள் விரும்பும் மதுபாட்டில்கள் வினியோகம் தொடர்ந்து நடக்கிறது.
மதுபாட்டில்கள் 90 நாட்களுக்கு மேல் விற்பனையாகாமல் இருந்தால் அதை திரும்ப பெற வேண்டும். அப்படி மதுபாட்டில்கள் ரிட்டர்ன் எடுப்பதில்லை. உடைந்த பாட்டில்களும் திரும்ப பெறுவதில்லை. தொடரும் முறைகேட்டினால் குடி பிரியர்கள் புகார் கூறி புலம்பி வருகின்றனர்.
