போலீஸ் வீட்டில் கொள்ளையடித்த மிளகாய் பொடி கும்பல் கைது…

கோவை குனியமுத்தூர் பகுதியில் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்லூரி மாணவர்கள் அறைக்குள் புகுந்த ஒரு கும்பல் அவர்களை கத்தியை காட்டி மிரட்டி செல்போன் லேப்டாப், பணம் பறிப்பில் ஈடுபட்டது.

இது குறித்த புகாரில், குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த கும்பல் குறித்து துப்பு துலக்கிய போலீசார், அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் போலீஸ் முகத்தில் மிளகாய் பொடி வீசி விட்டு காரில் தப்பினர். அதன் பின்னர் அந்த கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதற்கிடையே அந்த வழிப்பறி, பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்தவர்கள் கோவையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து சிவகங்கையை சேர்ந்த ஆகாஷ் (23), தஞ்சாவூரை சேர்ந்த மனோஜ் குமார் (26) திண்டுக்கல்லை சேர்ந்த முத்துப்பாண்டி (24), கோபி (23), கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த அண்ணாமலை (25), மதுரையை சேர்ந்த அருண் பாண்டி (27) ராமர் (23), தேனியை சேர்ந்த புவனேஷ் (22), சிவகங்கையை சேர்ந்த அருண் (20) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் இந்த கும்பல் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன் விவரம்:

கோவையில் வழிப்பறியில் ஈடுபட்டு போலீஸ் மீது மிளகாய் பொடி வீசி தப்பிய கும்பல், இங்கிருந்து தேனி மாவட்டத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு ஒரு எஸ்எஸ்ஐ வீட்டில் 90 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு, மும்பை, டெல்லியில் தலைமறைவாக இருந்துள்ளனர். கொள்ளையடித்த நகைகளை விற்று சொகுச் ஓட்டலில் அறை எடுத்து தங்கி மது, மாது என உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் டெல்லியில் இருந்து அந்த கும்பல், விமானத்தில் தமிழகம் வந்துள்ளது. பின்னர், சிவகங்கை மாவட்டம் கீழடி சென்று அங்கு பணத்துக்காக வாலிபர் ஒருவரை கொலை செய்துள்ளனர். அங்கிருந்து தப்பி கோவையில் பதுங்கி இருந்தனர். இதற்கிடையே கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ரம்யா பாரதி (பொறுப்பு) உத்தரவில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.

தனிப்படை போலீசார் செல்போன் எண்கள் டவர் லொக்கேஷன் ஆகியவற்றை ரகசியமாக ஆய்வு செய்தனர். அதில், இந்த கும்பலை சேர்ந்தவர்கள் கோவையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளை மற்றும் கொலை கும்பலை போலீசார் கைது செய்தனர்.

முடிஞ்சா தொட்டுப்பார்… சுட்டுப்பார்..

கொள்ளை கும்பலை சேர்ந்த 3 பேர் ஓட்டல் அறையில் அமர்ந்து உரையாடுவது போல் வீடியோ பதிவிட்டுள்ளனர். அதில், “பாம்பே தாராவியில் வந்து முடிஞ்சா தலைவனை தொட்டுப்பார் சுட்டுப்பார். தலைவனை தொட்டால் தமிழ்நாடே இறங்கும் பவர் தெரியாமல் மோதுறீங்க., அஜித் அண்ணே பயலுகடா. நாங்க சிங்க குட்டி வருங்கால ஜனாதிபதி மக்களாட்சிக்கு ஒரே எடுத்துக்காட்டு அருண்பாண்டி, யுவர் டேட், எங்களுக்கு எல்லாமே சித்தப்பாதான்.. எதுனாலும் எங்க சித்தப்பாவை கேட்டுக்கோங்க, என அந்த வீடியோ முடிவடைகிறது. போதையில் உளறியவாறு உள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

3 thoughts on “போலீஸ் வீட்டில் கொள்ளையடித்த மிளகாய் பொடி கும்பல் கைது…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *