வேலை நிறுத்தம் செய்வோம் என 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் எச்சரிக்கை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது.

இதில் தமிழ்நாடு இலவச சேவை ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்க (108 ஆம்புலன்ஸ்)

நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

இலவச ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசு நேரடியாக ஏற்று நடத்த வேண்டும். மேலும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமனம் செய்வதை கைவிட வேண்டும். தற்போது பணியில் உள்ள 7 ஆயிரம் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை, 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் அடுத்த மாதம் 74 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

கோவை அனைத்து முற்போக்கு இயக்கங்கள் அளித்த மனுவில், “தமிழக அரசு கடந்த மாதம் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதலுக்காக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதா உயர்கல்வியை முற்றிலும் தனியார் மயமாக்கும் வகையில் உள்ளது. தனியார் பல்கலைக்கழகம் தொடங்க குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்பதை மாற்றி சென்னை மாநகராட்சி என்றால் 12 ஏக்கரும், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 18 ஏக்கரும், பிற பகுதிகளில் 25 ஏக்கர் இருந்தால் போதும் என்று உள்ளது.

இதன்மூலம் தனியார் பல்கலைக்கழகங்கள் அதிகரித்து இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பது இல்லாத நிலை ஏற்படும். இதன்காரணமாக சமூக நீதி பாதிக்கப்படும். எனவே இந்த சட்ட திருத்தத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்” என தெரிவித்திருந்தனர்.

தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதை கழகத்தினர் அளித்த மனுவில், “பனைமரத்தூரில் மாநகராட்சி நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இங்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சமுதாய நலக்கூடம், பூங்கா அமைக்க வேண்டும்” என தெரிவித்தனர்.

கோவை நாகராஜபுரம் அடுக்குமாடி குடியிருப்பு பொதுமக்கள் அளித்த மனுவில், “எங்களது பகுதியில் தெருநாய்கள் தொல்லை உள்ளது, இங்கு சுற்றி திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்” என தெரிவித்தனர்.

வேடப்பட்டியை சேர்ந்த கணேஷ்குமார் அளித்த மனுவில்,”எனது நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த நபரும், அவரது மனைவியும் பண மோசடி செய்து விட்டு, தற்போது என்மீது தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *