கோவை உப்பிலிபாளையம் மேம்பாலம் விரிவாக்க பணி தாமதம்…

கோவை அவினாசி ரோடு பழைய மேம்பால ரவுண்டானா விரிவாக்க பணிக்கு ரூ.60

கோடியில் மாற்று திட்டம் எந்த துறையின் மூலமாக செய்வது என்ற குழப்பத்தால் தாமதம் நிலவுகிறது.

கோவை அவினாசி ரோடு உப்பிலிபாளையம் பழைய மேம்பாலம் கடந்த 1974ம் ஆண்டில் கட்டப்பட்டது.

தமிழகத்தில் ரவுண்டானா வடிவமைப்பில் அந்த காலத்தில் கட்டிய முதல் மேம்பாலம் என்ற பெருமை இதற்கு உண்டு வாகன நெருக்கம் அதிகமானதால் இந்த ரவுண்டானா பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேம்பால கீழ் பகுதியிலும் வாகனங்கள் செல்ல முடியாக அளவிற்கு நெருக்கடி இருக்கிறது.

மில் ரோடு, கூட் செட் ரோடு, டாக்டர் நஞ்சப்பா ரோடு கடவைக்கார சந்து பகுதிக்கு வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் இருக்கிறது. இதை தவிர்க்க 15 கோடி ரூபாய் செலவில் இப்போதுள்ள ரவுண்டானா பகுதியை மேலும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறை இந்த விரிவாக்க பணிக்காக திட்டமதிப்பீடு தயார் செய்து அனுப்பியது.

திட்ட ஒப்புதல் வழங்க வேண்டிய சமயத்தில் இந்த திட்டம் வேண்டாம், மேலும் ரோடு சீரமைப்பு பணிக்கு புதிய மதிப்பீடு தயார் செய்து அனுப்ப வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டது.

இதன்படி அவினாசி ரோடு பழைய மேம்பாலத்திலிருந்து மில் ரோடு, ஒப்பண கார வீசி, உக்கடம், குறிச்சி, சுந்தராபுரம், எல்ஐசி காலனி, ஈச்சனாரி தனியார் கல்லூரி வரை 6 கி.மீ தூரத்திற்கு ரோடு விரிவாக்கம் செய்ய சீரமைக்க, நடைபாதை அமைக்க, ரோடு சந்திப்பு பகுதியை மேம்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் படி மொத்தம் 60 கோடி ரூபாய் செலவில் ரவுண்டானா விரிவாக்கம் மற்றும் ரோடு சீரமைப்பு பணிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. டெண்டர் வெளியிடப்பட்டு பணிகள் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பணிகள் நடக்கவில்லை. தேசிய நெடுஞ்சாலை வசம் இருந்த இந்த ரோடு, நெடுஞ்சாலை ஆணையகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் அந்த துறையினர் சில மாதம் கடந்து, இந்த பகுதி தங்களுக்கு வேண்டாம். ஏற்கனவே நகரின் உள் பகுதியில் சிக்கலாக இந்த ரோடு இருக்கிறது. தங்களால் பணி செய்ய முடியாது என திட்டத்தை நிராகரித்தது. இப்போது இந்த ரோடு முறையாக தேசிய நெடுஞ்சாலைத்துறை வசம் திரும்ப ஒப்படைக்கவில்லை. திரும்ப ஒப்படைத்த பின்னர், மீண்டும் ஆய்வு செய்து திட்டத்திற்கான டெண்டர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இட்டத்தை செய்யாமல் துறை மாற்றி மாற்றி தாமதம் செய்து வருவதால் மக்கள் தவிப்படைந்துள்ளனர்.

3 thoughts on “கோவை உப்பிலிபாளையம் மேம்பாலம் விரிவாக்க பணி தாமதம்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *