கோவை GH புறநோயாளிகள் வார்டில் வெள்ளம் புகுந்தது…!

கோவை அரசு மருத்துவமனையில் பழைய புறநோயாளிகள் பிரிவில் நேற்று மழை நீர் வெள்ளம் புகுந்தது. முதல் தளம், இரண்டாம் தளம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்பட்டது.

இதனை மருத்துவமனை ஊழியர்கள் நேற்று அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மொத்தமாக மழை வெள்ளத்தை வெளியேற்ற முயற்சி செய்தனர். ஆனால், நீரை மொத்தமாக வெளியேற்ற முடியவில்லை டைல்ஸ் தரையில் நீர் தேங்கி அப்படி காணப்பட்டது. மேற்கூரைகள் விரிசல் விட்டதால் மழை நீர் மொத்தமாக வார்டிற்குள் புகுந்து விட்டதாக தெரியவந்தது. ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள வார்டுகள் அபாய நிலையில் இருந்ததால் வேறு பிரிவிற்கு மாற்றப்பட்டது.

ஆனால் சித்தா, மருந்தகம், காது மூக்கு தொண்டை பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் இங்கு செயல்பட்டு வந்தது. புறநோயாளிகள் பிரிவு காலை முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்படும். மாலை, இரவு நேரத்தில் இந்த பிரிவில் நோயாளிகள் இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பல மணி நேரம் போராடி ஊழியர்கள் நீரை வெளியேற்றினர். ஏற்கனவே இங்கு பல முறை வெள்ளம் வந்துள்ளது. வார்டை மூடி வைத்து சமாளித்து வந்தனர். கனமழை வந்தால் கட்டடம் இடியும் அபாயம் இருப்பதாக மருத்துவமனை ஊழியர்களே அச்சம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, “இந்த கட்டடம் பழுதாகி விட்டது. இங்கிருந்த 2 பிரிவுகளையும் நேற்று வேறு வளாகத்திற்கு மாற்றி விட்டோம். இந்த கட்டடம் இடிக்கப்படவேண்டிய நிலையில் இருக்கிறது. இதற்கு பதிலாக புதிதாக கட்டடம் கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

One thought on “கோவை GH புறநோயாளிகள் வார்டில் வெள்ளம் புகுந்தது…!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *