அதிகாரிகளின் ஆட்சி நடக்கிறது… அண்ணாமலை பேட்டி…

கோவையில் பீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கல்வித்திறன் மற்றும் கற்றல் திறன் குறைந்து வருகிறது. 10 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆண் மாணவர்களின் எண்ணிக்கை 9 சதவீதமும், பெண் மாணவர்களின் எண்ணிக்கை 6 சதவீதமும் குறைந்துள்ளது.

தமிழகத்தில் 50 சதவீத மாணவர்கள் உயர்கல்விக்கு செல்கின்றனர் என பெருமைப்பட்டு கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த விகிதம் குறைந்து வருகிறது. இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தைகள் அதிக மொழிகளை கற்க விரும்புகின்றனர். ஒன்றிய அரசு சில திட்டங்களைக் கொண்டு வந்தபோதும் தமிழகத்தில் எதிர்ப்புகள் எழுந்தன. ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளை கற்பிப்பதில் ஏற்பட்ட மாற்றங்களால் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்கள் அதிக மொழிகளை கற்க அனுமதிக்க வேண்டும்.

பல்வேறு நாடுகளில் குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் 3, 10 வயது குழந்தைகள்கூட இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

இதுதொடர்பாக ஒன்றிய அரசு கவனம் செலுத்தி பரிசீவிக்க வேண்டும். 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தத் தடை விதிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. படிப்பதற்காக கூகுள். போன்ற தளங்களை பயன்படுத்த அனுமதிக்கலாம். சமூக வலைத்தளங்கள் பல்வேறு சீர்கேடுகளை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்படவில்லை, பல்வேறு கிராமப்புறங்களில் ஏரிகளை தூர்வாருதல், அடிப்படை வசதிகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறவில்லை.

உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு பிறகு ஆளுங்கட்சியினர் பெயர் பெற்றுவிடுவார்கள் என்பதால் பணிகளுக்கான நிதியை வெளியிட தயங்குவதாக விமர்சனங்கள் எழுகிறது. கிராமப்புறங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது துரதிர்ஷ்டவசமானது, தமிழக அரசு அதிகாரிகளை நியமித்து உள்ளாட்சி பகுதிகளில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் நிர்வாகம் இருப்பதால் கிராமப்புறங்களில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தவெக அரசு தவறு செய்கிறது. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.

ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களின் ஆதரவைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் அடைக்கலம் தேடுகின்றனர். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அக்கட்சியினரை சந்தித்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ஆதரவு இருப்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். சமூக விரோதிகள் ஆளுங்கட்சியைக் கேடயமாக பயன்படுத்துவதைத் தடுக்க, தமிழக முதல்வர் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தாராபுரம் காவல்துறையினர் கோவை மாநகருக்கு வந்து அவரை கைது செய்து அழைத்து சென்றது ஏன்? காவல்துறையினர் நோட்டீஸ் வழங்கி காவல் நிலையத்திற்கு வரவழைத்திருக்கலாம், இது பெரிய வழக்கு அல்ல. காவல்துறை எதை நிரூபிக்க முயற்சிக்கிறது. ஆளுங்கட்சியின் கைப்பாவையாக காவல் துறை மாறுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். தேர்தல் நேரத்திலேயே கைது செய்திருக்கலாம். தற்போது கைது செய்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

2 thoughts on “அதிகாரிகளின் ஆட்சி நடக்கிறது… அண்ணாமலை பேட்டி…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *