பாரதியார் பல்கலைக்கழக மாணவிகள் விடுதி கேண்டீனில் புழு பூச்சி…

கோவை பாரதியார் பல்கலைக்கழக மகளிர் விடுதியில் வழங்கிய உணவில் புழுக்கள் இருந்ததாக மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மகளிர் விடுதிகள் உள்ளன. இங்கு சுமார் 600 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் பொது சமையலறையில் உணவு தயாரிக்கப்பட்டு, தினமும் மூன்று வேளையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாணவிகளுக்கு மதியம் வழங்கப்பட்ட காளான் பிரியாணியில் புழு இருந்துள்ளது.

இதனை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக புகார் அளித்த போது புழு இருந்தால் அதனை தூக்கி வீசிவிட்டு சாப்பிடுங்கள் என அலட்சியமாக கூறியுள்ளனர். மேலும், பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் உணவில் தொடர்ந்து புழுக்கள் வருவதாகவும், இதனால் மாணவிகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏற்கனவே, இந்த விடுதியில் கடந்த மாதம் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்கிய நிலையில், மீண்டும் தொடர்ந்து சுகாதாரமற்ற உணவுகளை மாணவிகளுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விடுதி மாணவிகள் கூறுகையில், விடுதியில் வழங்கப்படும் உணவில் சுத்தம் சுகாதாரம் எதுவும் இல்லை. கடமைக்கு என வழங்கி வருகின்றனர். நாங்கள் காசு கொடுத்தும் நல்ல உணவு கிடைப்பது இல்லை என்பது தான் உண்மை. கடந்த மாதம் 10-ம் தேதி சப்பாத்தி மற்றும் காய்கறி குருமாவில் புழு இருந்தது.

இதே போல் கடந்த 25-ம் தேதி வழங்கப்பட்ட சேமியா உப்புமாவிலும் புழு காணப்பட்டது. இந்த சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் உணவில் புழு இருக்கிறது. பல்கலைக்கழக விடுதி சமையலறையில் உணவு தயாரிக்கும் முறைகள், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதார நடைமுறைகள் குறித்து உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

2 thoughts on “பாரதியார் பல்கலைக்கழக மாணவிகள் விடுதி கேண்டீனில் புழு பூச்சி…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *