சாய்பாபா காலனி மேம்பால சர்வீஸ் ரோடு துண்டிப்பு… மாநகராட்சியால் மக்கள் தவிப்பு
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் சுமார் 1 கி.மீ தூரத்திற்கு 74 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்ட இந்த மேம்பாலம் உரிய கால அவகாசத்திற்குள் பணி முடிக்கப்பட்டது. இந்த நிலையில், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு பகுதியில் புதிதாக தார் தளத்துடன் தரமாக ரோடு போடப்பட்டது. இன்னொரு புறம் ரோடு பணி நடத்த திட்டமிட்ட நிலையில், புதிய தார் ரோட்டை மாநகராட்சியின் சார்பில் சூயஸ் நிறுவனத்தினர் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்காக குழி தோண்டி விட்டனர்.
கடந்த 2 ஆண்டாக மேம்பாலம் பணி நடந்த போது எந்த பணியும் செய்யாத கோவை மாநகராட்சியினர் ரோடு போட்ட பின்னர் அதை சேதம் செய்து குழி தோண்டியதால் நெடுஞ்சாலைத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இதுவரை திட்ட பணிகள் செய்யாமல் போக்குவரத்து சீராகும் நிலையில் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குழி தோண்டுவது சரியல்ல என நெடுஞ்சாலைத்துறையினர் மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
ஆனால் மாநகராட்சி நிர்வாகம், தற்போது தான் இந்த ஏரியாவிற்கு குடிநீர் இணைப்பு வழங்க போகிறோம், அதனால் குழி தோண்டுகிறோம் எனக்கூறி விட்டனர். இது மட்டுமின்றி பாதாள சாக்கடை பணிக்காக இன்னொரு பகுதியில் குழி தோண்டும் பணியையும் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சர்வீஸ் ரோட்டை சகதி காடாக மாற்றும் வகையில் மாநகராட்சியினர் கால தாமதமாக பணி செய்கிறார்கள்.
முன் கூட்டியே செய்ய வேண்டிய பணிகளை ரோடு போட்ட பின்னர் செய்கிறார்கள். இதனால் மக்கள் வரிப்பணம் வீணாக செலவு செய்யப்படுகிறது. குழி தோண்டி போடுவதால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் பாதிப்பு நிலவுகிறது. மக்களுக்கு கால தாமதம், வாகன நெரிசல் தொந்தரவில் சிக்கி தவிக்கிறார்கள்.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், “ரோட்டை தோண்டி குழாய் பதிக்கும் பணிகளை பல மாதம் முன்பே முடித்திருக்கலாம். ஏற்கனவே பாரதி பார்க் சந்திப்பு ரோடு, அழகேசன் ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. விபத்து நடப்பதால் யு டர்ன் அறிவித்து விட்டார்கள். ஏகப்பட்ட சிக்கலில் இப்போது குடிநீர் பணி என குழி தோண்டுகிறார்கள். இது எங்களுக்கு பாதிப்பை அதிகமாக்கி விட்டது. ” என்றனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை கோவை கோட்ட பொறியாளர் தனபாலன் கூறுகையில், “கடந்த காலங்களில் மாநகராட்சி நிர்வாகம் ஏன் இந்த பகுதியில் ரோட்டை தோண்டி குழாய் பதிப்பு பணி செய்யவில்லை என தெரியவில்லை. புதிய ரோட்டை தோண்டுவது சரியல்ல என நாங்கள் கூறினோம். இன்னொரு பகுதியில் யுஜிடி வேலை செய்ய வேண்டும் என்கிறார்கள் திட்ட பணிகள் தேவை என்பதால் அனுமதிக்க வேண்டியிருக்கிறது, “என்றார்.
