கோவையில் சாதி டார்ச்சரில் தற்கொலை செய்த மாணவரின் சடலம் 7 நாளுக்கு பிறகு ஒப்படைப்பு..

கோவை பீளமேடு துரைசாமி லே அவுட் 5வது வீதியை சேர்ந்தவர் அசோக்குமார். சலவை தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவுசல்யா தேவி. வீட்டு வேலை செய்து வருகிறார். இத்தம்பதியினரின் மகன் அகிலன் (16), பீளமேட்டில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 21ம் தேதி அகிலன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு அவர் படித்து வந்த பள்ளியில் நடந்த சாதிய கொடுமை தான் காரணம் என்று அவரது பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக, போலீசார், பள்ளியில் ஆசிரியர் விஜயகுமார், தலைமை ஆசிரியர் அருண்குமார், சக மாணவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிந்து 16 வயது மாணவர்கள் இருவரை கைது சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

இதைத்தொடர்ந்து ஆசிரியர் விஜயகுமார், தலைமை ஆசிரியர் அருண்குமார் இருவரையும் கைது செய்யும் வரை மாணவன் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர், உறவினர்கள், ஊர் மக்கள் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகிலனின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே, அகிலன் தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணை, கோவை மாநகர் பீளமேடு போலீசாரிடம் இருந்து, சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றவேண்டும் என வலியுறுத்தி அனைத்து கட்சி குழு நிர்வாகிகளின் சார்பில் மாநகர போலீஸ் கமிஷனர் ரம்யா பாரதியிடம் மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, அகிலன் தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். இதனால், பெற்றோர் சம்மதத்தின் பேரில் மாணவனின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அகிலன் இறந்து நேற்று 7வது நாளில் சடலம் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, மாணவனின் உடல், சிங்காநல்லூரில் உள்ள மின்மயானத்தில் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *