கோவை மாவட்டத்தில் ரோடுகள் நாசம்… சீரமைக்க நிதியில்லை

கோவை மாவட்டத்தில் பழுதான சாலைகளை சீரமைக்க நிதியின்றி நெடுஞ்சாலை துறை தவிக்கிறது.

கோவை மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை, திட்டப்பிரிவு, நபார்டு பிரிவு போன்றவற்றில் ஆண்டிற்கு 70க்கும் மேற்பட்ட திட்டப் பணிகள் நடத்தப்பட்டு வந்தது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் பெரும்பாலான பிரிவுகள் இணைக்கப்பட்டது. கோட்டம் 1, 2 என பிரிக்கப்பட்டது. அலுவலக ரீதியான நடைமுறை மாறியமைக்கப்பட்டது.

அதன்பின்னரும், நடப்பாண்டிற்கு திட்டப்பணிகள் சொற்ப அளவில்கூட துவக்கப்படவில்லை. மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகள் துவக்கப்படாமல் இருப்பதால் சாலை கட்டுமானங்கள் மேம்பாடு அடைய முடியாத நிலைமை இருக்கிறது.

மாவட்ட அளவில் வாகனங்களின் பெருக்கம், ரோடு பழுது பிரச்னை அதிகமாக இருக்கிறது. 2 வழிப்பாதையை 4 வழியாக மாற்ற வேண்டும், 4 வழிப்பாதையை 6 வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருக்கிறது. இது பரிசீலிக்கப்படவில்லை.

மாவட்ட ரோடு, கிராம பகுதி ரோடுகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மருதமலை ரோடு விரிவாக்கம் தவிர வேறு எந்த வேலைக்கும் மாநில நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் தரவில்லை.

பீளமேடு கோல்டுவின்ஸ் நீலாம்பூர் மேம்பாலம் விரிவாக்கம் குழப்ப நிலையில் கிடக்கிறது. கோவை மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை குடிநீர் பணிக்காக தோண்டப்பட்டு, நாசமான சாலைகளை சீரமைக்க 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த பணியும் துவக்கப்படவில்லை.

இந்த நிலையில் மழை காரணமாக, பாதிப்பு மேலும் அதிகமாகிவிட்டது. மாவட்ட அளவில் இதுவரை 17 நாட்கள் மழை பெய்துள்ளது. இதில், 200 கி.மீ முதல் 250 கி.மீ தூரம் வரை நெடுஞ்சாலைத்துறையின் ரோடு பள்ளமாகி, தார் தளம் மோசமாகி விட்டது. சில இடங்களில் பாலங்களும் சேதமாகி விட்டது. ரோடு பணிகளுக்கு பல கோடி ரூபாய் நிதி எதிர்பார்த்து நெடுஞ்சாலை துறையினர் காத்திருக்கின்றனர். ஆனால், நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

கோவை மாநகரம், தொழில் நகர அந்தஸ்தில் இருந்தபோதிலும், ரோடு கட்டமைப்பில் முக்கியத்துவம் தரப்படவில்லை சாலைகள் சிதைந்து வருவதால், தொழில்துறையினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். உற்பத்தி செய்த பொருட்களை பாதுகாப்பாக கொண்டுசெல்ல முடியாத நிலை இருக்கிறது. நெடுஞ்சாலை ஆணையகத்தின் மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு விரிவாக்க பணியும் துவக்கப்படவில்லை இது, திட்ட அறிக்கையுடன் முடங்கி கிடக்கிறது. தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் தரமற்ற நெரிசல் மிக்க ரோடுகளால் விபத்துகள் அதிகமாகி வருகிறது, தொழில் நகரம் விபத்து நகரமாக மாறிவிட்டது. மேராடு பராமரிப்பு பணி, சீரமைப்பு நடத்த முடியாமல் நெடுஞ்சாலை துறை தள்ளாடி வருகிறது. சாலை கட்டமைப்பை மேம்படுத்த போதிய நிதி ஒதுக்கினால் மட்டுமே பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்கிறார்கள், நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *