கோவையில் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி…

கோவை மாவட்ட அளவில் 3.50 லட்சம் எக்டரில் விவசாய பயிர் சாகுபடி நடக்கிறது.

இதில் 88 ஆயிரம் எக்டரில் தென்னை மரங்கள் உள்ளது. கடந்த சில மாதங்களாக போதுமான மழை இல்லாத நிலையிருந்தது. சில நாட்களாக கனமழை பெய்தது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கிணறு, போர்வெல் வசதியில்லாத வானம் பார்த்த பூமிகளில் கூட மழையால் சோளம், தட்டு பயிர் சாகுபடி துவங்கியுள்ளது.

வழக்கமாக வடகிழக்கு பருவ மழை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குறைவாக தான் பெய்யும். ஆனால் இந்த முறை அதிகமாக மழை பெய்துள்ளது. கிணறு, குளம், குட்டை, தடுப்பணைகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

நடப்பாண்டில் இந்த மழையால் விவசாய பயிர் சாகுபடி அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வாழை, தென்னை, தக்காளி, வெண்டை, அவரை, துவரை, தோட்ட கலை பயிர் சாகுபடி பல மடங்கு அதிகமாகும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். பெரும்பாலான விவசாய நிலங்களில் உழவு மற்றும் விதைப்பு பணிகள் துவங்கியுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “கடந்த தென்மேற்கு பருவ மழையை அதிகமாக எதிர்பார்த்து ஏமாந்து விட்டோம். இப்போது வந்த மழையால் நிம்மதி கிடைத்துள்ளது. விதைப்பு பணி துவக்கினால் தோட்ட கலை, வேளாண் பயிர்களில் 4 முதல் 5 மாத காலத்தில் அறுவடை முடிக்க முடியும். இந்த மழை எங்களுக்கு சாதகமாக இருந்தது. சாகுபடி அதிகரித்தால் வேளாண் விளை பொருட்களின் விலை குறையும்” என்றனர்.

ஊரக வளர்ச்சி முகமையினர் கூறுகையில், “100 நாள் வேலை திட்டத்தில் மழை நீர் வடிகால், வேளாண், விவசாய பணிகள் அதிகளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தினமும் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் வேலை செய்கிறார்கள். மழை காலமாக இருப்பதால் கிராமங்களில், முக்கிய நீர் தேக்க பகுதிகளில் மழை நீரை தேக்க அதிக பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த ஏரியாவில் எந்த அளவிற்கு நீர் தேக்கம் செய்யப்பட்டுள்ளது என ஜியோ டேக் மூலமாக கண்டறியப்படுகிறது” என்றனர்.

One thought on “கோவையில் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *