Coimbatore junction: வடக்கர்களுக்காக உருவாச்சு தனி ரூட்…

கோவை ரயில் நிலையத்தில் தாமஸ் கிளப் பகுதி வழியாக லக்கேஜ் கொண்டு செல்ல தனி பாதை உருவாக்கி இருப்பது பயணிகளுக்கு உதவிகரமாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து அதிக வருவாய் தரக்கூடிய பிரதான ரயில் நிலையமாக கோவை இருக்கிறது ஆனால் கட்டமைப்பு, பிளாட்பாரம், பார்க்கிங், பயணிகள் வசதிகளில் கோவை ரயில் நிலையம் மிக மோசமான நிலைமையில் இருக்கிறது. பிளாட்பாரங்களில் ரயில் நகர்ந்தால் தான் அடுத்து ரயில் வந்து நிறுத்த முடியும் என்கிற பரிதாப நிலைமை தொடர்கிறது.

ரயில் நிலையத்தில் 1 முதல் 6 பிளாட்பாரம் இருக்கிறது. இதில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1 முதல் 3 பிளாட்பாரங்கள் வழியாக வந்து செல்கிறது. பாசஞ்சர் மற்றும் காத்திருந்து செல்லும் ரயில்கள் 4 முதல் 6 வது பிளாட்பாரங்களில் நிறுத்தப்படுகிறது. கோவை மார்க்கமாக கேரளா மற்றும் வடமாநிலங்களுக்கு 60க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் வந்து செல்கிறது. தினமும் பல ஆயிரம் பயணிகள் கோவை ரயில் நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள்.

ஆனால் இட வசதி போதுமான அளவு கிடையாது. பிளாட்பாரங்களில் ரயில் பெட்டிகள் நிறுத்த போதுமான இடவசதி கிடையாது, பெரிய ரயில்களில் 22 முதல் 26 பெட்டிகள் வரை இணைக்கப்படுகிறது. இந்த பெட்டிகள் பிளாட்பாரத்தின் கடைசி எல்லை தாண்டி நிறுத்த வேண்டியிருக்கிறது. வடமாநிலம் மற்றும் தொலை தூரம் செல்லும் ரயில்களில் கோவை ரயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட பணிகளை கூட செய்ய முடியாத நிலையிருக்கிறது.

காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் ரயில் நிலையத்திற்கு பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். வாகனங்கள் நிறுத்த 30 சென்ட் பரப்பிற்கும் குறைவான இடம் மட்டுமே இருக்கிறது. பார்சல், புக்கிங் செய்ய வாகனங்கள் வந்து செல்ல போதுமான இடமில்லை, ரயில் நிலையத்திற்கு பிரதான ரோடாக ஸ்டேட் பாங்க் ரோடும், கூட் செட் ரோடும் இருக்கிறது.

கடந்த பல ஆண்டாக இந்த இரண்டு ரோடுகளும் விரிவாக்கப்படவில்லை. ரயில்வேக்கு சொந்தமான இடங்கள், பிளாட்பாரத்தின் இரு பகுதியிலும் இருக்கிறது. இந்த இடத்தை மீட்க முடியவில்லை. ரயில் பெட்டி பராமரிக்க போதுமான இடவசதி செய்யவில்லை. கோவை ரயில் நிலையத்தின் மேம்பாட்டிற்காக ஒன்றிய அரசின் ரயில்வே நிர்வாகம் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.

கடந்த 10 ஆண்டாக கோவை ரயில் நிலையம் அடிப்படை வசதிகளில் பின் தங்கிய நிலைமையில் இருக்கிறது. ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களில் இறங்கி பிரதான வாயில் வழியாக வெளியே செல்ல கடும் நெரிசல் நிலவுகிறது. மூட்டை முடிச்சுகளுடன் படி ஏறி இறங்கி செல்ல இந்த பகுதி ஏதுவாக இல்லை.

இதனால் லக்கேஜ் உடன் வரும் பெரும்பாலான பயணிகள் ‘தாமஸ் கிளப்’ சந்து பகுதியை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். மண் பாதையாக இருந்தாலும் இந்த வழியாக மூட்டைகளை எளிதில் தூக்கி செல்ல முடிகிறது. குறிப்பாக வடமாநிலத்திலிருந்து ரயில்களில் வருபவர்கள் இந்த பாதை வழியாக மூட்டைகளை தூக்கி வருகிறார்கள்.

மேலும் பஸ் ஸ்டாப்பும் அருகே இருப்பதால் இந்த பாதை உபயோகத்திற்கு ஏதுவாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக கோவை ரயில் நிலையம் முன் பஸ் ஸ்டாப் அருகே நெரிசல் தவிர்க்க தாமஸ் கிளப் பாதையை பயன்படுத்துகின்றனர். தினமும் பல ஆயிரம் பயணிகள் குறிப்பாக வடமாநில தொழிலாளர்கள் இந்த பாதையை பயன்படுத்தி நெருக்கடியை தவிர்த்து வருகின்றனர்.

இதற்கு இணையாக எதிர்ப்பகுதியில் கூட் செட் ரோட்டிலும் இதுபோல் பாதை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *