நீட் தேர்வு ரொம்ப கஷ்டம்… கோவையில் மாணவிகள் புலம்பல்…

கோவையில் இன்று நீட் மறுதேர்வு நடந்தது. இதில் 7,092 பேர் தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் இதற்காக 15 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. அரசு கலைக் கல்லூரி, எஸ்ஜிஆர் கல்லூரி, நிர்மலா கல்லூரி, பிஎஸ்ஜி கல்லூரி, கொங்குநாடு கல்லூரி, அவிநாசிலிங்கம் கலைக்கழகம் உள்ளிட்ட 15 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த மாதம் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 6 ஆயிரத்திற்கும் மற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் எழுதினர் கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 16 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. தேர்வை எழுதிய மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கு பதிலாக தற்போது நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது. மதியம் 2 மணிக்கு தேர்வு துவங்கி மாலை 5.15 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுத கூடுதலாக 5 நிமிடங்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டது. கோவையில் உள்ள தேர்வு மையங்களுக்கு தடையற்ற மின்சாரம், அவசர மருத்துவ உதவி உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது.

தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மாணவ மாணவிகள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வழக்கம் போல் கம்மல், ஆபரணங்கள், 5லையில் உள்ள கிளிப் போன்றவை அகற்றப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 5364 பேர் தேர்வில் பங்கேற்றனர். 1728 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. கடந்த முறையை விட தற்போது குறைவான மாணவ மாணவிகளே தேர்வு எழுதியிருந்தனர். பெரும்பாலான மாணவ மாணவிகள் இந்த தேர்வில் வினாத்தாள் மிக கடினமாக இருந்தது, பல வினாக்கள் கேள்விப்படாத அளவில் இருந்தது. மிகவும் சிக்கலான கேள்விகளை எதிர் கொண்டோம் என தெரிவித்தனர்.

சிவகாசியை சேர்ந்த மாணவர் கார்த்திக்,” நான் மிக சிறப்பாக படித்து தயார் நிலையில் தேர்வுக்கு வந்தேன். இயற்பியல் பாடம் தொடர்பான கேள்விகள் சவாலாக இருந்தது. கடந்த முறை வந்த வினாத்தாளை விட இது கடினமாக இருந்தது. என்னை போல் பலரும் கேள்விகளுக்கு திணறி போய் விட்டார்கள், “ என்றார்.

2வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவ மகிதா கூறுகையில், “இந்த தேர்வு எளிதாக இருந்தது என சொல்ல முடியாது, பரவாயில்லை என்பது போல் தான் இருந்தது. அறிவியல் வினாக்கள் சவாலாக இருந்தது. கேள்வித்தாள் வைத்து பதிலை சரிபார்த்து தான் எது சரியானது என சொல்ல முடியும். கடந்த தேர்வை விட இந்த முறை சிக்கலான கேள்விகள் இருந்தது. இது வெற்றிக்கான வாய்ப்பாக இருக்குமா என தெரியவில்லை. ” என்றார்.

தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த மாணவி ஜனனி கூறுகையில், “ நல்ல முறையில் தேர்வு எழுதினோம். ஆனால் உயிரியல் பாடம் தொடர்பான கேள்விகள் கடினமாக இருந்தது. இதர கேள்விகள் பரவாயில்லை. வெற்றி பெறும் வகையில் கேள்விகள் இருந்ததா என உறுதிபட சொல்ல முடியவில்லை. முதல் முறையாக நான் இந்த தேர்வு எழுதினேன். மிகவும் சவால் நிறைந்த வகையில் கேள்விகள் இடம் பெற்றிருந்தது. எளிதாக மதிப்பெண் பெற முடியாத வகையில் கேள்விகள் உருவாக்கப்பட்டிருந்தது, “ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *