பெற்ற மகனை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை.. .

கோவையில் தங்கள் உறவுக்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவனை அடித்துக் கொடுமைப்படுத்திக் கொலை செய்த வழக்கில், தாயுடன் தகாத உறவில் இருந்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், பெற்ற தாய்க்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கோவை வடவள்ளி ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் அருண் (38). தனியார் மருத்துவமனை ஊழியரான இவருக்கும், திவ்யா (32) என்ற பெண்ணுக்கும் திருமணமாகி அபிஷேக் (6) என்ற மகனும், ஹரிசினி (3) என்ற மகளும் இருந்தனர். திருமணத்திற்குப் பிறகு திவ்யாவுக்குப் பிற ஆண்களுடன் ஏற்பட்ட தொலைபேசி பழக்கத்தை அருண் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கணவரைப் பிரிந்த திவ்யா, தனது குழந்தைகளுடன் கோவை சாய்பாபா காலனி, கோவில்மேடு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். அங்குள்ள அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சென்று வந்த திவ்யாவுக்கு, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ராஜதுரை (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது தகாத உறவாக மாறியது.

திவ்யாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற ராஜதுரையும் திவ்யாவும் தனிமையில் சந்திப்பதற்கு, 6 வயது சிறுவன் அபிஷேக் இடையூறாக இருப்பதாகக் கருதியுள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து சிறுவன் அபிஷேக்கையும், 3 வயது பெண் குழந்தையையும் அடிக்கடி கொடூரமாக அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளனர். கட்டையாலும், கரண்டியைக் சூடுபடுத்தியும் சிறுவனை சித்ரவதை செய்துள்ளனர்.

ஒருமுறை அருண் தனது மகனை பார்க்காத வந்தபோது, “அம்மாவும் வீட்டுக்கு வரும் அங்கிளும் என்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார்கள், என்னை உங்களுடனே அழைத்துச் செல்லுங்கள்” என்று சிறுவன் அபிஷேக் கதறி அழுதுள்ளான். அதற்கு அருண், தான் புதிதாகக் கட்டி வரும் வீட்டின் பணிகள் முடிந்ததும் இருவரையும் அழைத்துச் செல்வதாகக் கூறி ஆறுதல் படுத்தியுள்ளார்.

கடந்த 19.4.2020 அன்று, சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஒரு கடைக்கு அருகில் வைத்து ராஜதுரையும் திவ்யாவும் சேர்ந்து சிறுவன் அபிஷேக்கை குச்சியால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதைப் பார்த்த பொது மக்கள் அவர்களைக் கண்டித்துள்ளனர். இந்த கடுமையான தாக்குதலில் நிலைகுலைந்த சிறுவன் மயங்கி விழுந்துள்ளான்.

இதையடுத்து, சிறுவன் கீழே விழுந்துவிட்டதாகக் கூறி, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக தன் உயிரை இழந்தான் . சிறுவன் இறந்துவிட்டதை அறிந்தவுடன் ராஜதுரையும் திவ்யாவும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகினர்.

இச்சம்பவம் குறித்து சாய்பாபா காலனி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த ராஜதுரை மற்றும் திவ்யாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர் .

இந்த வழக்கு கோவை மாவட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் (எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம்) விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், குற்றம் சாட்டப்பட்ட திவ்யா மற்றும் ராஜதுரை ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என்று உறுதி செய்தார்.

தண்டனை விவரங்கள் தனியாக அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, 6 வயது சிறுவனைக் கொடூரமாக அடித்துக் கொலை செய்த குற்றத்திற்காக ராஜதுரைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். மேலும், தன் சொந்த மகனைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி, அதற்கு உடந்தையாக இருந்த பெற்ற தாய் திவ்யாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *