மின்வாரியத்தில் லஞ்சம்: கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் …!
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது.
இதில் கோவை கணபதி மற்றும் பல்வேறு பகுதியை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர்கள் அளித்த புகார் மனுவில், ” பயணிகள் ஆட்டோக்களில் சிலர் வணிக சரக்குகள் ஏற்றி செல்வதாக தெரியவந்துள்ளது. இதனால் சரக்கு ஆட்டோக்களின் வாடகை பாதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்திற்கும், விதிகளுக்கும் மாறாக இப்படி செய்வது அதிகமாகி விட்டது கேரளா மற்றும் கர்நாடகா பதிவு எண் கொண்ட வாகனங்கள் கோவையில் உள்ளூர் வாடகை அடிப்படையில் இயங்கி வருகிறது. இதனால் அரசுக்குள் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மாவட்ட அளவில் பயணிகள் ஆட்டோக்களில் சரக்கு ஏற்றி செல்வதை கண்டறிய சோதனை நடத்த வேண்டும்.
விதிமீறலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். “என தெரிவித்துள்ளனர்.
விஷ்ன இந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி சதீஷ்குமார் தலைமையில் கலெக்டரிடம் அளித்த புகார் மனுவில், “உக்கடம் வட்சுமி நரசிம்மர் கோயில் பிரகாரத்தின் சவரை ஒட்டி இறைச்சி கடை உள்ளது. இந்த கடையை அகற்ற கோரிக்கை விடப்பட்டது.
ஆனால் இதுவரை இந்த கடையை அகற்றவில்லை. நரசிம்மர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி. சனிக்கிழமை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. கோயிலை வலம் வரும் பக்தர்கள் இறைச்சி கடையில் விரக்தியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்து சமய அறநிலையத்துறையினர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். “என தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பழனிச்சாமி, துணை தலைவர் பொன்னுசாமி அளித்த புகார் மனுவில், “விவசாய பயன்பாட்டிற்கு இயக்கப்படும் டிராக்டர், பவர் டிரில்லர், ரோட்டா வேட்டர் போன்ற வாகனங்களுக்கு கேன்களின் பெட்ரோல் டீசல் வழங்கவேண்டும். தற்போது புதிய உத்தரவின் படி 200 லிட்டருக்கு மேல் பெட்ரோல், டீசல் வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேவையான அளவு எரிபொருள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், “என தெரிவித்துள்ளனர்.
பனப்பட்டி அரிஜன காலனி பகுதியை சேர்ந்த உமாவதி என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், “எனது வீட்டின் மேல் கூரை அருகே மின் கம்பம் அமைத்து மின் ஒயர் பொருத்தி விட்டார்கள். நான் எனது பட்டா இடத்தின் வழியாக கம்பம், மின் ஒயர் இருப்பதாக மின் வாரியத்திடம் புகார் தெரிவித்தும் மின் கம்பத்தை மாற்றவில்லை.
மாறாக மின் கம்பம் மாற்ற என்னிடம் 40 ஆயிரம் ரூபாய் பணம் கேட்கிறார்கள். குழந்தைகளை வைத்து கொண்ட மின் கம்பத்தின் அருகே வீட்டில் வசிக்க பயமாக இருக்கிறது. மின் கம்பம் இடம் மாற்ற மின் வாரியத்தினர் மறுக்கிறார்கள், “என தெரிவித்துள்ளார்.
கணுவாய் ஆசிரியர் காலனியை சேர்ந்த மணிமேகலை அளித்த மனுவில், “எனது விவசாய நிலத்தில் போர்வெல் போடப்பட்டுள்ளது. இதில் மின் இணைப்பு கேட்டு கடந்த ஆண்டு 3 லட்ச ரூபாய் வைப்பு தொகையை தட்கல் மூலமாக செலுத்தியிருக்கிறேன். இதுவரை எனக்கு மின் இணைப்பு வழங்கவில்லைல,” என தெரிவித்துள்ளார்.
அன்னுார் எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்த மீனாட்சி என்பவர் தனது மகள் 10ம் வகுப்பு முடித்து விட்டார். இன்னும் சாதி சான்று வழங்கவில்லை. பள்ளி நிர்வாகத்தினர் 11ம் வகுப்பில் சேர சாதி சான்று, வருமான சான்று கேட்கிறார்கள். எனது கணவரி சாதி சான்று இருந்தும் எனக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான சான்று வழங்க தாமதம் செய்து வருகிறார்கள் என தெரிவித்தார்.
சோலையார் அணை பகுதியை சேர்ந்த அய்யம்மாள், நான் 60 ஆண்டாக சோலார் அணையின் இடது கரை பகுதியில் வசிக்கிறேன். உடல் நலன் சரியில்லாத காரணத்தினால் ஒரு ஆண்டு வீட்டு வரி கட்டவில்லை. இப்போது வரி கட்ட சென்றால் வீடு என்னுடைய அல்ல. வேறு ஒருவர் வாங்கி விட்டார்.
அவர் பெயரில் வீட்டு வரி இருப்பதாக கூறுகிறார்கள். நான் வசிக்கும் வீட்டை எனக்கு தெரியாமல் மாற்றி வேறு ஒருவர் பெயருக்கு சொத்து வரி போட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என கலெக்டரிடம் முறையிட்டார்.
