கோவை மத்திய சிறையில் கஞ்சா: போலீசார் அதிரடி ரெய்டு…!
கோவை மத்திய சிறையில் கோவை மாநகர போலீசார் இன்று காலை முதல் திடீர் சோதனை ஈடுபட்டனர்.
சிறையில் உள்ள கைதிகள் கஞ்சா மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துவதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் பாலியல் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள பிளாக் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பிளாக் , விசாரணை கைதிகள் உள்ள வளாகங்களில் போலீசார் சோதனை செய்தனர் .
சிறையில் உள்ள கழிவறைகள், உணவு தயாரிப்பு கூடம் மற்றும் மைதானங்களில் மண்ணைத் தோண்டி பார்த்து கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறதா என சோதனை செய்தனர் . மேலும் கைதிகள் சிலரிடமும் சோதனை நடத்தப்பட்டது. சிறை கைதிகளுக்கு வெளிநபர்கள் காம்பவுண்ட் தாண்டி கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தூக்கி வீசுகிறார்களா எந்தெந்த பகுதி வழியாக கஞ்சா பொட்டலங்கள் சிறைக்குள் வருகிறது என போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர்.
சிறை காம்பவுண்ட் ஒரு பகுதி வடக்கு தாசில்தார் அலுவலகத்தை ஒட்டியும் இன்னொரு பகுதி அரசு மகளிர் பாலிடெக்னிக் வளாகத்தை ஒட்டியும் மற்றொரு பகுதி பெரியார் அறிவுலகம் வளாகத்தை ஒட்டியும் அமைந்துள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த பகுதியில் வழியாக சிறை வளாகத்திற்குள் பொருட்கள் கடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இங்கே கண்காணிப்பு கேமரா மற்றும் போலீசார் டவர் மூலமாக சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையைத் தாண்டி தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறைக்குள் செல்கிறதா என போலீசார் ஆய்வு செய்தனர்.
ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
