மீடியா டவருக்கு மவுசு… போலீசாருக்கு ரவுண்ட்ஸ்
கோவை மாநகராட்சி சார்பில் கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல நூறு கோடி ரூபாய் செலவில் பணிகள் நடந்தது.
உக்கடம் பெரியகுளத்தின் கரை சீரமைக்கப்பட்டு பொழுது போக்கு அம்சங்களுடன் வாக்கிங் தளம், விளையாட்டு பூங்கா, சைக்கிளிங் பாதை போன்றவை உருவாக்கப்பட்டது. ஐ லவ் கோவை என பிரமாண்ட ஐகான் ஏற்படுத்தப்பட்டது. உக்கடம் வாலாங்குளம் வாக்கிங் தளம், படகு துறை, குளங்களின் நடுவே உருவாக்கப்பட்ட தீவு திடல்,
ரேஸ்கோர்ஸ் பகுதியில் உருவாக்கப்பட்ட டான்சிங் நீர் ஊற்று, வாக்கிங் தளம் போன்றவை மக்களை கவர்ந்தது. ரேஸ்கோர்ஸ் வாக்கிங் தளம் டிஜிட்டல் கவுண்டிங் முறையில் உருவானது. வாக்கிங் ஏரியா 2.5 கி.மீ சுற்றளவிற்கு உருவாக்கப்பட்டு நடைபாதையோரம் தாவரங்கள், உடற்பயிற்சி கூடம், யோகா, அக்குபிரசர் தளம், சிறுவர் விளையாட்டு பூங்கா போன்ற கூடுதல் அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
அலங்கார வசதிகளுடன் தமிழக எழுத்துக்களும் உருவாக்கப்பட்டிருந்தது. பிரமாண்டமாக 15 மீட்டர் உயரத்தில் மீடியா டவர் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த மீடியா டவர் அகில இந்திய அளவில் பிரபலமாகி வைலராகி கோவையின் அடையாளமாக மாறி விட்டது. சோசியல் மீடியாக்களில் இந்த டவர் பிரதானமாக காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த டவர் முன்பும் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி பகுதியிலும் பொதுமக்கள் போட்டோ எடுத்து ஸ்டேடஸ் வைத்து வருகின்றனர்.
இந்த மீடியா டவர் இளைஞர்களின் சந்திப்பு பகுதியாக மாறி விட்டது. நள்ளிரவு நேரங்களில் ‘பைக்கர்ஸ்’ இங்கே சந்தித்து நகரை வலம் வந்து பின்னர் பிரிந்து செல்வது வாடிக்கையாக இருக்கிறது. பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீடியா டவர் ஏரியாவில் தினமும் சந்திப்பதும், போட்டோ ஷூட்டிங் செய்வதும் நடக்கிறது.
இதன் காரணமாக போலீசார் இங்கே அடிக்கடி ரோந்து பணி நடத்தி கண்காணிக்கிறார்கள். இந்த டவர் ஏரியாவின் மாறாத மவுசு ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தூங்காத இரவாக மாறி விட்டது.
