கோவை மாநகராட்சியில் ஹாலிடே கால்ஸ் திட்டம்…

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகள் விடுமுறைக்கு வெளியூர் சென்றால் அவர்களை தொலைபேசி மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு ஹாலிடே கால்ஸ் திட்டம், கோவை மாநகராட்சியில் உள்ள 33 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாநகராட்சி முழுவதும் 10,092 கர்ப்பிணிகள் மருத்துவ பரிசோதனைகள் முறையாக மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் அரசு விடுமுறை நாட்கள் வந்ததையொட்டி கர்ப்பிணிகள் பலர் தங்களது சொந்த ஊருக்கு செல்ல நேரிடும் என்பதால் 33 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள செவிலியர்கள் தொலைபேசி மூலம் அவர்களை கண்காணிக்க உள்ளனர்.

அதன்படி, நாளை (6ம் தேதி) முதல் வரும் 10 வரை 5 நாட்கள் ஹாலிடே கால்ஸ்’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் அடுத்தகட்டமாக நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பிரசவம் எதிர்பார்க்கப்படும் கர்ப்பிணிகள் 2,045 பேர், அதிகம் கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகள் 2,558 பேர் மற்றும் 2,027 பிப்ரவரி மாதம் பிரசவம் எதிர்பார்க்கப்படும் கர்ப்பிணிகளில் அதிகம் கவனம் தேவைப்படும் கார்ப்பிணிகள் 2,013 பேரையும் சேர்த்து மொத்தம் 6,616 கர்ப்பிணிகள் கண்டறியப்பட்டு உள்ளனர்.

33 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள செவிலியர்கள் தொலைபேசியில் மூலம் தொடர்பு கொண்டு இந்த கர்ப்பிணிகள் விடுமுறைக்கு வெளியூர் சென்றிருந்தால் அதனை உறுதிபடுத்தி அவர்களது கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம், கர்ப்பகால சர்க்கரை நோய், ரத்த சோகை விவரங்களை சேகரித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கி, ஏதேனும் கர்ப்பகால சிக்கல்கள் இருப்பின் அந்த குறிப்பிட்ட பகுதிக்கு அருகிலுள்ள சீமாங் அரசு மருத்துவ நிலையங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட உள்ளனர்.

மேலும், வருகின்ற கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட அரசு விடுமுறை நாட்களில் மாநகராட்சி 33 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் ஹாலிடே கால்ஸ்’ திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *