Drugs in school: போதை பழக்கம் அதிகம் ;பள்ளி மாணவர்கள் கோவை கலெக்டரிடம் புகார்…
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான போதை பொருள் விழிப்புணர்வு கூட்டம் இன்று நடந்தது.
இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாணவ மாணவிகளிடம் உங்களுக்கு போதைப் பொருள் மற்றும் கல்வி தொடர்பாக ஏதாவது தகவல் இருந்தால் தெரிவிக்கலாம் என கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
அப்போது மாணவ மாணவிகள் தரப்பில் குறிப்பிட்ட சில பள்ளிகளில் மாணவர்கள் போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். போதையுடன் பள்ளிக்கு வருகிறார்கள். இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதை பொருட்கள் பயன்படுத்துபவர்களை திருத்த வேண்டும், அவர்களை விளையாட்டில் ஈடுபட வைக்க வேண்டும்.
பள்ளி நிர்வாகத்தினர் போதை தடுக்க கண்காணிப்புடன் பணியாற்ற வேண்டும் என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார்.
அரசு பள்ளிகளில் விளையாட்டில் ஈடுபட எந்த வசதியும் செய்யவில்லை என வெளிப்படையாக புகார் தெரிவித்தனர். விளையாட்டு உபகரணங்கள் இல்லாமலும், மைதானம் இல்லாமலும் மாணவர்கள் விளையாடமுடியாத சூழல் இருக்கிறது என முறையிட்டனர்.
மாணவ மாணவிகள் எதிர்காலத்தில் என்ன மாதிரியான பணிகள் செய்ய ஆசைப்படுகிறீர்கள் என கலெக்டர் கேட்டபொழுது, “சிலர் விமான பைலட் ஆகவும், சிலர் ராணுவம், அரசு துறை பணிகள் செய்ய ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தனர்.
உயர்ந்த பதவிக்கு செல்ல நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அதற்கு ஏற்ப எங்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். பள்ளிகளில் தேவையான கட்டமைப்புகளை எங்களுக்கு உருவாக்கி தர வேண்டும். தனியார் பள்ளியில் இருப்பது போல் எங்களுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.
