கோவையில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜினியர் கைது
கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் தபால் தந்தி அலுவலகம் கோர்ட் பள்ளிகள் பாஸ்போர்ட் அலுவலகம் ரயில் நிலையம் என பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தது.
அரசியல் மற்றும் சினிமா தொடர்பு நபர்கள் பெயர்களை குறிப்பிட்டு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி கேட்டு ஆட்சேபகரமான தகவல்களை வெளியிட்டு இந்த வெடிகுண்டு மிரட்டல் இமெயில்கள் விடப்பட்டிருந்தது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர் . ஆனால் இந்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. பிறகு இந்த வழக்கு தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்த போது டார்க் நெட் வெப்சைட்டில் பல்ரு போலி இமெயில்கள் மூலம் கோவை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட முறை இமெயில் மிரட்டல் விடப்பட்டது கண்டறியப்பட்டது. இதில் தொடர்புடைய நபர் பெயர் சரத் சுப்பிரமணியன் சங்கர் (35) என தெரிய வந்தது. இவர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
இவரை மூன்று மாதங்களுக்கு முன்பே கண்டுபிடித்தனர். ஆனால் தற்போது எங்கே இருக்கிறார் என்ற விவரம் என போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவரை பல்வேறு விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து தேடிவந்தனர். சமீபத்தில் இவர் சென்னை விமான நிலையம் வந்தபோது போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் தகவல் அடிப்படையில் சங்கரை அடையாளம் கண்டறிந்து கைது செய்தனர்.
இவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கோவையில் அதிக மிரட்டல் வந்த போதிலும் மாநகர சைபர் கிரைம் போலீசார் நான்கு வழக்குகள் மட்டுமே பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில் சங்கரை கோவை அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கோவையில் பரபரப்பு ஏற்படுத்திய முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில் கோவை மாவட்டத்தில் வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால் போலீசார் நிம்மதி அடைந்துள்ளனர்.
இல்லாவிட்டால் தினமும் போலீசார் மோப்பநாய் சகிதமாக தினமும் சோதனை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். எதற்காக சங்கர் இது போன்ற மிரட்டல் விடுத்தார் அவருக்கும் வேறு ஏதாவது அமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
