காத்து வாங்குது காஸ் பாரஸ்ட் மியூசியம்…
கோவை வனக்கல்லூரி வளாகத்தில் காஸ் பாரஸ்ட் மியூசியம் அமைந்துள்ளது.
இதில் வன விலங்குகளின் உடல் பாகங்கள், எலும்பு, தோல், பல்வேறு வன பொருட்கள், மரங்கள், வேர், அரிதான பொருட்கள், பழங்கால வனத்துறையினர் பயன்படுத்திய வேட்டை கருவிகளான ஈட்டி, ரம்பம், கத்தி, அரிவாள், கோடாரி, 100 ஆண்டுகளுக்கு முந்தைய துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், பழங்கால கற்கள், வேதிப்பொருட்கள் குடுவையில் வைக்கப்பட்ட பாம்பு போன்றவை வைக்கப்பட்டிருக்கிறது.
யானைகளின் முழு உடல், தந்தம், காட்டெருமை, சிறுத்தையின் தத்ரூப தோற்றம் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. பழமையான கட்டடத்தில் இந்த காட்சி பொருட்கள் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மியூசியம் 1902ம் ஆண்டில் திறக்கப்பட்டது. தற்போது பெரியவர்களுக்கு 40 ரூபாய், சிறியவர்களுக்கு 20 ரூபாய் நுழைவு கட்டணம் பெறப்படுகிறது.
கடந்த சில ஆண்டாக இந்த மியூசியம் காண வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இந்த மியூசியம் தொடர்பாக வனத்துறை, சுற்றுலா துறையில் போதுமான தகவல்கள் வெளியிடப்படவில்லை. பிரசித்த பெறாத இடமாக இதனை அலட்சியமாக விட்டு விட்டார்கள்.
அபூர்வ பொருட்கள், அரிதான பொக்கிஷங்கள் இருந்தும் இந்த காட்சியகத்திற்கு தினமும் 200க்கும் குறைவான பார்வையாளர்கள் வருகின்றனர். இந்த காட்சியகத்தின் போட்டோ, தகவல்களை சுற்றுலா தளங்களில் வெளியிட்டு மக்களை அழைக்க வேண்டும்.
கோவையில் கோவை குற்றாலம், ஈஷா, வெள்ளிங்கிரி, பொள்ளாச்சி போன்றவை சுற்றுலா தளங்களில் முதன்மை இடம் பெற்றுள்ளது. கோவை நகரில் உள்ள பாரஸ்ட் மியூசியம், பீளமேட்டில் உள்ள மண்டல அறிவியல் மையம் போன்றவை மாணவ மாணவிகள் காண வழிவகை செய்ய வேண்டும். பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
