கோனியம்மன் கோயில் உண்டியல் கொள்ளை: 8 பேர் சஸ்பெண்ட்

காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலில் கடந்த 15 ம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

அப்போது திருவிழா காலங்களில் பயன்படுத்தும் ஆறு உண்டியலில் ஒரு உண்டியலை காணவில்லை. அதை கோயில் ஊழியர்கள் ரகசியமாக கோயிலுக்கு பின்புறம் எடுத்துச் சென்று திறந்து அதில் உள்ள பணத்தை திருடி சென்று விட்டதாக பக்தர் ஒருவர் இந்து சமய அறநிலையத் துறையினருக்கு புகார் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது .இதில் உண்டியல் களவாடப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவரம் தெரிய வந்தது . கோயில் நிர்வாக அலுவலர் குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் கோயிலில் பணியாற்றி வந்த அர்ச்சனை டிக்கெட் விநியோகிப்பாளர் பாலசுப்பிரமணியன் (52) ஊழியர் சரவணன் (34) , பிரதீப் குமார் (31) மற்றும் கோயில் பூசாரி கிருஷ்ணராஜ் (54) ஆகியோரை உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இவர்கள் உண்டியலில் இருந்து 31,000 ரூபாய் திருடி அதை பங்கு போட்டுக் கொண்டதாக தெரியவந்தது. கோயிலில் பணி செய்த ஊழியர்களே கோயிலில் உண்டியல் கொள்ளையடித்த சம்பவம் பக்தர்கள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் கவனம் இல்லாமல் நடந்து கொண்டதாக கோயிலின் செயல் அலுவலர் குமார் மற்றும் ஆய்வாளர்கள் உதயகுமார், ரவிக்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் போலீசாரால் கைது செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன் சரவணன் உட்பட நான்கு பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
உதவி ஆணையர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
உண்டியல் கொள்ளை விவகாரத்தில் கோயிலில் தொடர்புடைய 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த காலங்களில் இந்த கோயிலில் மேலும் பல உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் பொருட்கள் திருடப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *