நிதி நிலைமை சீரான பின் 2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை:அமைச்சர் அருண்ராஜ் தகவல்…!
தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக இரண்டு மாணவிகள் தற்கொலை செய்தது பெரும் வலியை அளிப்பதாக கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
கோவை இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. விழாவில், கல்லூரி முதல்வர் வீரமணி தலைமையுரை ஆற்றினார். மாவட்ட கலெக்டர் பவன்குமார் முன்னிலை வகித்தார். இதில், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பங்கேற்று 100 எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத், சட்டமன்ற உறுப்பினர்கள் கனிமொழி சந்தோஷ், ஸ்ரீகிரி பிரசாத் உள்பட பலர் பங்கேற்றனர். பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது: டாக்டர்கள் கண்கண்ட தெய்வமாக பார்க்கப்படுகின்றனர். நான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி உள்ளேன்.
மருத்துவ துறையில் புதிய டெக்னாலஜிகள் வர போகிறது. எத்தனை டெக்னாலஜிகள் வந்தாலும் டாக்டர்கள் நோயாளிகளிடம் சேவை மனப்பான்மையுடன் இருக்க வேண்டும். ஆங்காங்கே ஏற்படும் சில பிரச்சினையால் ஒட்டுமொத்த மருத்துவத்துறையும் பாதிக்கிறது.
டாக்டர்களிடம் மன அழுத்தம் இருக்க கூடாது.
தமிழ்நாட்டில் தற்போது நீட் தேர்வு காரணமாக இரண்டு பேர் தற்கொலை செய்துள்ளனர். இது எனக்கு வருத்தத்தையும், பெரும் வலியையும் அளிக்கிறது. மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் பிரச்சினை மிகவும் கஷ்டமாக இருக்கிறது. டாக்டர்கள் தொடர் பணியில் இருந்து மனஅழுத்தம் நீங்க கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில், தலைவர் பற்றி சொல்லவில்லை என்றால் எப்படி. அவர் எனக்கு மருத்துவத்துறையை அளித்தது மிகப்பெரிய பாக்கியம்.
அனைத்து தரப்பு மக்களும் தரமான மருத்துவ சேவை வழங்குவது முதல்வரின் விருப்பம். அதனை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். மருத்துவத்துறையில் பொதுமக்களுக்கான தரமான சேவை உறுதி செய்யப்படும். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் சரியில்லை என தெரிவித்தனர்.
அது உடனடியாக சரி செய்யப்படும். மேலும், நியூரோ சர்ஜன்ஸ், நியூரோலஜிஸ்ட் மட்டுமே இருப்பதாகவும்,
சூப்பர் ஸ்பெஷாலிட்டி டாக்டர்கள் தேவை அதிகமாக இருப்பதாகவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தவிர, நோயாளிகள் பலர் டயாலிசிஸ் செய்ய வெளி மருத்துவமனைக்கு செல்வதாக தெரிவித்துள்ளனர்.
இது சரிசெய்யப்படும். மேலும், இஎஸ்ஐயில் நர்சிங் கல்லூரி அமைக்க நிதி கிடைத்து இருக்கிறது. அட்மிஷன் துவங்க வேண்டும் என கூறி உள்ளனர். அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும். இஎஸ்ஐ-யின் தரம் உயர்த்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் அவர் நிருபர்களிடம் கூறும்போது நிதி நிலைமை சீராக இல்லை. அதை சரி செய்த பின் 2500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.
