வெள்ளலூர் குப்பை ஒரு ஆண்டுக்குள் காலி… அமைச்சர்கள் உறுதி
கோவை நெக்ஸ்ட் அமைப்பின் சார்பில் தொழில் துறையினருடன் கலந்தாலோசனை கூட்டம் கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று நடந்தது.
இதில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ), கொடிசியா சைமா, கோவை கிளை இந்திய வர்த்தக சபை, கிராடாய், சீமா உள்பட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறுதுளி அமைப்பின் நிர்வாகி வனிதா மோகன், கோவை மாவட்டத்தில் நீர் நிலைகளை சீர் அமைக்க வேண்டும். கழிவுகளை தடுக்க வேண்டும். மரக்கன்றுகளை அதிகமாக நட வேண்டும்,” என்றார்.
ஓட்டல் சங்கங்களின் நிர்வாகி சீனிவாசன், “அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கோவையில் சுற்றுலா திட்டங்களை சிறப்பாக செய்ய வேண்டும். சூயஸ் குடிநீர் திட்டம் அனைத்தும் பகுதிகளுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் என்ற சூழ்நிலை மாற வேண்டும்.
கோவை நகர் இரவு அதிக நேரம் வணிக வர்த்தக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும். இரவு 11 மணிக்குள் கடைகளை மூடும் நிலைமை இருக்கிறது. ” என்றார். கோவை நெக்ஸ்ட் அமைப்பின் நிர்வாகி சதீஷ் பேசுகையில், ” மாவட்டத்தின் கட்டமைப்பை மாற்றும் திட்டங்களை அமலாக்க வேண்டும். கிழக்கு பைபாஸ் முக்கிய பகுதிகளில் மேம்பாலம் கட்டுவது போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும், என்றார்.
இதில் தமிழக மதுவிலக்கு அமலாக்க துறை அமைச்சர் விக்னேஷ் பேசுகையில், “வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்னைக்கு தீர்வு காணப்படும். பயோ மைனிங் முறையில் குப்பைகள் அகற்றப்படும். குப்பை கழிவுகளை செங்கல் சூளைகளில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு ஆண்டிற்குள் குப்பைகள் அகற்றப்படும்.
குப்பை கிடங்கினால் வெள்ளலூர் பகுதிகளில் நிலத்தடி நீர் நிறம் மாறி வருகிறது. திங்கள். கிழமை போர்வெல்லில் மஞ்சள் தண்ணீர் வரும், அடுத்த நாள் வெள்ளை கண்ணீர், அப்புறம் பச்சை தண்ணீர் என சொல்லும் நிலை இருக்கிறது. இந்த நிலை மாறும். நகரின் போக்குவரத்துக்கு பஸ் ஸ்டாண்ட் அவசியம். பஸ் ஸ்டாண்ட் இருந்தால் அந்த பகுதிக்கு செல்ல ரோடு வசதிகள் சிறப்பாக இருக்க வேண்டும்.
எங்கள் ஆட்சியால் யாருக்கும் காசு தர வேண்டியதில்லை. அப்படி யாராவது பணம் கேட்டு வந்தால் நீங்கள் தர வேண்டாம். மக்களுக்கு தொழில் துறையினர் சேவை செய்யலாம். ஊரை தத்து எடுத்து பேசவை செய்யலாம், பள்ளியில் அடிப்படை வசதி செய்து தரலாம். பொது கழிப்பிடம் கட்டி தரலாம். ” என்றார்.
தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பேசுகையில், “அமைச்சர் நண்பர், தெரிந்தவர்கள் உறவினர்கள் என யார் வந்தாலும் அவர்களை தள்ளி வையுங்கள். எந்த சலுகையும் தர வேண்டாம். கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் போது அந்த பகுதி போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க வேண்டும்.
அதற்கேற்ப எந்த இடத்தில் மைதானம் அமைக்கலாம் என திட்டமிட்டு அதற்கான முயற்சி எடுக்கப்படும். மேற்கு பைபாஸ் ரோடு அடுத்த கட்ட பணிகள் விரைவில் துவக்கப்படும். இரவு நேரத்தில் கடைகள் திறப்பது தொடர்பாக ஆலோசித்து அது தொடர்பான முன்னெடுப்பு மேற்கொள்ளப்படும்.
கோவையில் சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான முயற்சி எடுக்கப்படும். சூயல் குடிநீர் திட்டம் 60 வார்டுகளில் முடிந்துள்ளது. இதர பகுதிகளில் குடிநீர் பணிகள் நடத்தப்படும். வெள்ளலூர் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்ற, அந்த பிரச்னைகளை ஒரு ஆண்டு காலத்தில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ” என்றார்.
