சொத்து பறிச்சிட்டு துரத்திட்டாங்க… கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் கண்ணீர் மனு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது.

இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நஞ்சுண்டாபுரம் பகுதி ரேணுகா (60) என்பவர் அளித்த புகார் மனுவில், ” என் கணவர் 2 ஆண்டிற்கு முன் இறந்து விட்டார். என் கணவர் பெயரில் உள்ள வீட்டில் நான் வசிக்கிறேன். என் கணவர் பெயரில் உள்ள சொத்து பத்திரம் காணவில்லை.

நான் வீட்டில் இருந்து வெளியே சென்ற போது பத்திரம் காணாமல் போய் விட்டது. இதனால் சொத்து பிரிக்க முடியவில்லை. எனவே பத்திரம் கண்டறிய உதவி செய்ய வேண்டும், ” என தெரிவித்துள்ளார்.

சோமனூர் சேடபாளையம் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (70) என்பவர் அளித்த புகாரில், ” என் மகன் எனது வீட்டை அபகரித்து கொண்டார். என்னை அடித்து துன்புறுத்துகிறார். நான் சம்பாதிக்கும் பணம், சொத்து அனைத்தும் தனக்கு வேண்டும் என கேட்டு என் மகன் டார்ச்சர் செய்கிறார்.

அவரால் நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். என் மகனிடம் இருந்து தானமாக நான் கொடுத்த என் சொத்துக்களை மீட்டு தர |வேண்டும், ” என தெரிவித்துள்ளார்.

அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி (80) என்பவர் அளித்த புகார் மனுவில், “ நான் என் மனைவி பாப்பாத்தி என்பவருடன் வசித்து வருகிறேன். என் மகன் என் வீட்டை அபகரித்து என்னையும் என் மனைவியையும் வீட்டில் இருந்து விரட்டி விட்டார். என் வீட்டை மீட்டு எனக்கு தர வேண்டும். என் மகனால் எங்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருக்கிறது, ” என கூறியுள்ளார்.

சுண்டப்பாயைம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (75) அளித்த மனுவில், ” நான் மில் வேலை செய்து ஓய்வு பெற்றவன். எனது வீட்டை மகன் அபகரித்து என்னை துன்புறுத்துகிறார். என் மனைவியின் 30 பவுன் தங்க நகையை பறித்து கொண்டார். வயதான காரணத்தினால் என்னால் வேலைக்கு சென்று சாப்பிட முடியவில்லை. எந்த வருமானமும் இன்றி தவிக்கிறேன். எனது காலம் முடியும் வரை என் வீட்டில் வாழ உதவி செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *