ஒண்டிப்புதூரில் தெரு நாய் கருத்தடை மையத்தில் தாக்குதல்…
கோவை ஒண்டிப்புதூரில் மாநகராட்சியின் தெரு நாய்கள் கருத்தடைமையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பிராணி மித்ரன் என்ஜிஓ அமைப்பின் மூலம் நாய்களுக்கு மேற்கொள்ளப்படும் கருத்தடை அறுவை சிகிச்சைகளில் அலட்சியம், சுகாதாரமற்ற மருத்துவ சூழல் மற்றும் விலங்குகளை மனிதாபிமானமற்ற முறையில் கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
இதனால், அந்த அமைப்பின் ஏபிசி செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி அதன் அங்கீகாரத்தை நிரந்தரமாக ரத்து செய்து மாநகராட்சி ஒப்பந்தத்தையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் தலை, கைகளில் கட்டுப்போட்டு வந்து விலங்கு நல ஆர்வலர்கள் நேற்று மனு அளித்தனர்.
இந்த மனுவில், பிராணி மித்ரன் அமைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சைகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அறுவை சிகிச்சைக்கு பின்னர் நாய்களுக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு, உடல் வீக்கம், தையல் போடப்பட்ட காயங்கள் மீண்டும் திறப்பது, நோய்த்தொற்று உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும், சில நேரங்களில் இத்தகைய சிக்கல்களால் நாய்கள் உயிரிழப்பதாகவும் புகார்கள் தெரிவிக்கின்றன.
அறுவை சிகிச்சை முறைகள், கால்நடை மருத்துவர்களின் மேற்பார்வை மற்றும் சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு ஆகியவற்றில் உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை. மருத்துவ மையத்தில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை மேசைகள் போதிய சுகாதாரத்துடன் பராமரிக்கப்படுவதில்லை.
தவிர நாய்களை பிடிப்பது மற்றும் கையாள்வதிலும் மனிதாபிமானமற்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, ஒண்டிப்புதூர் நாய்கள் கருத்தடை மையத்தில், ஏபிசி செயல்பாடுகளை விசாரணை முடியும் வரை இடைநிறுத்த வேண்டும். அந்த அமைப்பின் பிற செயல்பாட்டு மையங்களிலும் ஆய்வு நடத்த வேண்டும்.
ஒண்டிப்புதூர் மருத்துவ மையத்தில் அறுவை சிகிச்சை நடைமுறைகள், மருத்துவ உபகரணங்கள், நாய்கள் தங்க வைக்கப்படும் கூண்டுகளின் சுகாதாரம், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு, நாய்களின் இறப்புப் பதிவுகள் மற்றும் அவற்றைப் பிடித்து இடமாற்றம் செய்த விவரங்கள் ஆகியவற்றை முழுமையாக தணிக்கை செய்ய வேண்டும்
புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் விசாரணையில் உறுதி செய்யப்பட்டால். சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
