கொங்கு நாட்டை காத்த புலி குத்தி வீரர்கள்…!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வனாந்திரமாக காட்சி அளித்தது கொங்கு நாடு.

சிறுத்தை, புலி கூட்டத்திற்கு இடையே உயிர் பயத்தில் மரண போராட்டத்தில் மக்கள் போராட்டத்துடன் வாழ்க்கை நடத்தி வந்தனர். பனங்காடு, முள்காடு, புதர்காடு, மரக்காடு, பாறைக்காடு என பல்வேறு வகையான காடுகளின் தொகுப்பாக கொங்கு நாடு காணப்பட்டது. இப்போதைய கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், தாராபுரத்தை உள்ளடக்கிய பகுதி தான் அன்றைய கொங்கு நாடு.

சிறுத்தை, புலி கூட்டத்தை அடக்க இளைஞர்கள் படை உருவாக்கப்பட்டது. இரவு, பகலாக முறை வைத்து காவல் காத்து சிறுத்தை, புலியை விரட்டினார்கள். அபாய விலங்குகளை கொல்லும் வீரர்களுக்கு பொற்காசு பரிசுகளும் வழங்கப்பட்டு வந்தன. முதல் வீர சோழன், வீர சோழ கலி மூர்க்கன், கலி மூர்க்க விக்ரமசோழன், அபிமான சோழராஜாதி ராஜன், உத்தமசோழன், வீரசோழன், உத்தமசோழ வீர நாராயணன்,

ராசகேசரி குலோத்துங்கன் போன்றவர்களின் ஆட்சி காலத்தில் (கி.பி 943 முதல் கி.பி 1168 வரை) சிறுத்தை, புலி அட்டகாசம் அதிகமாக இருந்துள்ளது.

புலி, சிறுத்தைகளின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். புலியை அடக்க சென்ற பல வீரர்கள் மரணமடைந்தனர். புலியை கொல்ல அந்த காலத்தில் குத்தீட்டி, வெட்டரிவாள் போன்றவற்றை ஆயுதமாக பயன்படுத்தியுள்ளனர். புலியை வென்று மக்களை காத்த வீரர்கள் மற்றும் போராட்டத்தில் இறந்த வீரர்களின் நினைவாக புலி குத்தி வீரன் சிலைகள் அமைக்கப்பட்டன.

இவற்றை நடுகல்’ என அழைத்தனர். மாவீரனின் நினைவையும் அவரின் போராட்ட குணத்தையும் வாழ்த்தி பாடல் எழுதி வைத்திருந்தனர். கொங்கு நாட்டில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் புலி குத்தி வீரனின் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. கால போக்கில் காடுகள் அழிக்கப்பட்டு வீடுகள் அதிகரித்தது. நாளடைவில் சிறுத்தை, புலிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டன.

சில புலி குத்தி கற்களை தொல்லியல் துறையினர் சேகரித்து பாதுகாத்து வருகின்றனர். சில நடுகற்கள் கோயில்களாக மாறி விட்டன. சில நடு கற்கள் குறிப்பிட்ட சில இன மக்களுக்கு குலசாமியாகவும் இருக்கிறது. காத்தவாரயன், மாயவன், முனியப்பன் என பல்வேறு பெயர்களில் புலி குத்தி கல் கோயில் அமைந்துள்ளது.

உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் புலி குத்தி வீரன் கோயில் இருந்தது. ரோடு விரிவாக்க பணியின் போது இந்த கோயில் அகற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *