காயாத காஞ்சி மாநதி….
காஞ்சிமாநதி என்ற நொய்யல் ஆறு மேற்கு தொடர்ச்சி மலையில் 70க்கும் மேற்பட்ட ஓடை நீர் மூலமாக சங்கமிக்கிறது.
நொய்யல் ஆறு கி.பி.12ம் நூற்றாண்டில் இயற்கையாக காட்டாறாக உருவானதாக கூறப்படுகிறது. 183 கி.மீ தூரம் பாயும் இந்த ஆறு கொடுமுடியில் காவிரி ஆற்றில் கலக்கிறது. சுமார் 2 லட்சம் ஏக்கர் பாசன பரப்புக்கு நீர் ஆதாரமாக இருந்த வற்றாத ஜீவநதி தான் நொய்யல். 700 ஆண்டுகளுக்கு முன் பேரூர் பகுதியில் நொய்யலின் இடையே இரண்டு கல்லணைகள் இருந்தன.
இவை கால போக்கில் வெள்ளத்தில் சிதைந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த கல்லணைகள் இருந்ததிற்கு ‘கோனேரின்மை கொண்டான்’ என துவங்கும் கல்வெட்டு பாடல் ஆதாரமாக இருந்துள்ளது. இது கொங்கு சோழ மன்னன் வீரராசேந்திரன் (கி.பி. 1207-1256) காலத்திய கல்வெட்டு என தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
தேவி சிறை என்ற இடத்தில் அணை கட்ட வேண்டும். கோளூர் அணைக்கு நீர் நிரப்பி, தேவி சிறையை நீர் நிரப்பவேண்டும் என கல்வெட்டில் குறிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கல்வெட்டு இப்போது கிடையாது. தேவி சிறை, கோளூர் அணை எங்கே இருந்தது என்ற குறிப்பு கிடையாது. 100 ஆண்டிற்கு முன் இந்த கல்வெட்டு ஆதாரத்தை வைத்தே நொய்யலின் பூர்வீகம் சிறிதளவு அறியப்பட்டுள்ளது.
சூலூர் அருகே சர்க்கார் பெரியபாளையத்தில் நீர் நிர்வாகம் குறித்த சுந்தரபாண்டிய மன்னரின் ஆணை இருந்ததாக கூறப்படுகிறது. வெள்ளலூரை சேர்ந்த செம்படவன் பிள்ளான் என்பவரிடம் நீர் நிர்வாக உத்தரவு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர் மூலமாகவே நீர் திறப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
நீர் அளவுகளை அறியும் பொறுப்பு கோயில் தானத்தார் வசம் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு தண்டோரா மூலமாக நீர் இருப்பு, வரத்து அறிவிக்கப்பட்டு வந்தது. அதிக வெள்ளம் பாய்ந்த ஊர்களும், காய்ந்த போன ஊர்களும் அந்த காலத்தில் ‘அனாதிபாழ்’ என அழைக்கப்பட்டன. ஆதி கால நொய்யலில், 32 குளங்கள், 43 தடுப்பணைகள் இருந்தன. இவற்றில் இப்போது 28 குளங்கள், 20 தடுப்பணைகள் மட்டுமே. பயன்பாட்டில் இருக்கின்றன. ஆதி கால நொய்யலில் பரிசல் போக்குவரத்து இருந்தது.
மழை காலத்தில் நொய்யல் வெள்ளம் கரை கடந்து ஊருக்குள் புகுந்து விடும். நொய்யல் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான ஆடு, மாடு, கோழிகள் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் நொய்யலில் நீரை காண்பதே அரிதாகி விட்டது.
நொய்யல், வாய்க்கால், குளங்களின் கரைகள் ஆக்கிரமிக்கப்பட்டு பல ஆயிரம் வீடுகளும், ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்களும் உருவாகி விட்டன. வெள்ள நீர் பாய்ந்த ஆறு சாக்கடை சகதியில் நாறி கிடக்கிறது. இருப்பினும் ஆயிரம் ஆண்டுகளை கடக்கும் பெருமை நொய்யல் ஆற்று இருக்கிறது.
