சடங்குகளை உருவாக்கிய நாட்டார் சபைகள்…
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அதாவது கி.பி 10ம் நூற்றாண்டில் கொங்கு மண்டலம் (கோவை வட்டாரம்) 3,750 சதுர கி.மீ பரப்பாக இருந்தது.
இதில் வாயறைக்கா நாடு, பொங்கலூர்க்கா நாடு, பேரூர் நாடு என மூன்று முக்கிய பகுதிகள் இருந்தன. நாடு என்பது வட்டாரமாக குறிக்கப்பட்டு வந்தது. ஆலத்தூர், வெள்ளலூர், மன்னியூர், சூரலூர் திருமுருகன்பூண்டி போன்றவற்றின் பெயர்கள் நாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது.
கல்வெட்டு ஆதாரங்களில் இது தொடர்பாக பெயர்கள் இருந்துள்ளன. ஆனால் முப்பெரும் நாடுகளின் கட்டுபாட்டுக்குள் சிறு நாடுகள் இருந்ததாக தெரிகிறது. வாயறைக்கா நாடு வடபரிசார நாடு எனவும் அழைக்கப்பட்டது.காஞ்சிமாநதியான நொய்யல் ஆற்றை மையமாக கொண்டு இந்த நாடு அமைந்திருந்தது. முன்னதாக பேரூர் நாடும், கடைசியாக பொங்கலூர்க்கா நாடும் அமைந்திருந்தது. இடையில் பூலுவ நாடு உருவானதாக தெரிகிறது. இந்த நாட்டு நிர்வாகங்களில் நாட்டு சபைகள் முக்கிய முடிவுகள் எடுத்தன. இதற்கு நாட்டார்சபை எனவும் பெயர் வைக்கப்பட்டிருந்தது.
நாட்டு சாமந்தர், நாட்டு கருமம் ஆராய்வாளர்கள் இதில் முக்கிய தலைவர்களாக செயல்பட்டுள்ளனர். பாண்டிய போசளர், மூன்றாம் வீரசோழன் காலத்தில் நாட்டார் சபை ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. நாயக்கர்கள் கோவை வட்டாரத்தில் ஆதிக்கம் செலுத்திய போது நாட்டார் சபை நடத்தியதாக கூறப்படுகிறது. கொங்கு வட்டாரத்தில் 24 நாட்டு சபைகள் ஆதிக்கத்தில் இருந்தன.
இடிகரை அன்னூரில் சித்திர மேழி தட்டான் கல்வெட்டில் இது குறித்த குறிப்புகள் மூலமாக தொல்லியல் துறையினர் நாட்டார் சபை குறித்த விவரங்களை சேகரித்துள்ளனர்.
நாட்டார் சபைகள் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து விசயங்களுக்கும் கட்டுபாடு விதித்திருந்தார்கள். திருமண உறவுக்கான குலம், கோத்திரங்களை நாட்டார் சபைகள் முடிவு செய்தன. யார் யார் எங்கே, எப்போது பெண் எடுக்கவேண்டும் என விதிமுறை வகுத்தனர். ஒவ்வொரு சாதியினருக்கும் சடங்கு சம்பிரதாயம் ஏற்படுத்தி கொடுத்தனர். அம்மி மிதிப்பது, அருந்ததி பார்ப்பது, மாமன் மச்சான் உறவு கலப்பது போன்றவை நாட்டார் சபை மூலமாக உருவாக்கப்பட்டது.
ஆறு, குளத்து நீரை பாசனத்திற்கு பயன்படுத்த பாசன சபைகளை ஏற்படுத்தியதும் நாட்டார் சபைகள் தான். வெளி மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி வந்தவர்கள், வியாபார ரீதியாக கொங்கு மண்டலத்திற்கு வந்தவர்கள், மொழி வாரியான மக்கள் என பல்வேறு தரப்பினருக்கு திருமண சம்பிரதாய சடங்குகள் நாட்டார் சபை மூலமாக ஏற்படுத்தப்பட்டன.
ஒரு நாட்டு பிரிவை சார்ந்தவர்கள், அதாவது ஒரு வட்டாரத்திற்குள் இருப்பவர்கள் வேறு ஒரு வட்டாரத்தில் பெண் எடுக்க கூடாது. பெண் கொடுக்க கூடாது என தெரிவிக்கப்பட்டது. காஞ்சி மாநதி நீர் பங்கீடு செய்யப்பட்டு பாசன சபைகள் உருவாக்கப்பட்டன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வகுத்த விதிமுறைகள் ஆங்கிலேயர் காலத்திலும் பின்பற்றப்பட்டன.
நாட்டார் சபைகளின் செயல்பாடுகள், விதிமுறைகள் காலத்திற்கு ஏற்ப மாறி விட்டன. இப்போது நாட்டார் சபைகள் 18ம் நூற்றாண்டில் முடக்கி விட்டது. ஆனால் ஊர் பஞ்சாயத்து உருவாக்கப்பட்டது. இதன் மூலமாக ஊர் கட்டுபாடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது.
