ஆனைமலை காட்டின் கும்கி யானைகள்…!
சங்க காலத்தில் புகழ் பெற்று விளங்கியது உம்பற்காடு (யானைக்காடு).
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இளங்கண்ணனார் ஆட்சி காலத்தில் யானைகள் கூட்டமாக சுற்றி திரிந்துள்ளன. நெற்பயிர் சாகுபடி செய்து அறுவடை செய்து, பழக்கப்படுத்தப்பட்ட யானைகளை வைத்து மிதிக்க செய்து நெல் மணி சேகரித்துள்ளனர்.
உம்பற்காட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருந்துள்ளன. மூங்கில், தேக்கு, வாகை என பசு மர தோட்டங்களுடன் வளம் மிக்க பகுதியாக உம்பற்காடு இருந்தது. குட்டுவன் கோதை என்ற மன்னன் காலத்தில் ஆத்து பொள்ளாச்சியில் குடம் குடமாக வெள்ளி காசு கிடைத்தது. இந்த காசு கி.பி மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது.
இந்த காசு மூலமாக யானைக்காட்டை தலைமையிடமாக கொண்டு யானை வணிகம் நடத்தப்பட்ட வரலாற்று குறிப்புகளின் மூலமாக அறியப்படுகிறது. யானை காட்டில் சுற்றும் காட்டு யானைகளை 10 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி, அதில் மூங்கில் மரங்களையும், காய்ந்த இலை தழைகளை போட்டு மூடி வைத்து யானைகளை அதில் விழ வைத்து பிடிப்பது வாடிக்கையாக நடந்து வந்தது.
பள்ளத்தில் விழும் யானைகளை சங்கிலியால் பிணைத்து ஆலமரத்தில் கட்டி வைத்து மனோவசிய பயிற்சி தருவார்கள். அதன் பின்னர் வெள்ளிக்காசுக்கு யானை விற்பனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. யானை காட்டில் இருந்த பெரும்பாலான யானைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கேரள மாநிலத்தினர் யானைக்காட்டிற்கு வந்து கொம்பன் (ஆண்) யானைகளை அதிகளவு வாங்கி சென்றனர்.
யானைக்காடு காலப்போக்கில் ஆனைமலைக்காடு, ஆனைமலையாக மாறியது. இங்கேயிருந்த யானைகளும் எண்ணிக்கையில் வெகுவாக குறைந்தன. காண்டூர் கால்வாய், பி.ஏ.பி அணை, சிறுவாணி அணை கட்டும் பணிகளுக்கு ஆனைமலையில் பிடிபட்ட பயிற்சியளிக்கப்பட்ட யானைகள் (கும்கி) பயன்படுத்தப்பட்டன.
டாப்சிலிப் கோழிக்கமுதியில் 1922ம் ஆண்டில் கும்கி யானைகள் முகாம் அமைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இங்கே 100க்கும் மேற்பட்ட கும்கிகள் வளர்க்கப்பட்டன. இப்போதும் ஏராளமான கும்கி யானைகள் உள்ளன. காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விட்டதால் மோதி விரட்ட கும்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
காட்டு யானைகளுடன் மோதி கும்கிகள் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது. ஆனைமலை காட்டில் பெருங்கற்கால கல் பதுக்கைகள் கிடைத்துள்ளன. இவை 3ம் நூற்றாண்டை சேர்ந்தவை. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆனைமலை காட்டை கட்டுபாட்டில் வைத்து ஆட்சி நடத்தியுள்ளார்.
பல்வேறு சேரர்கள் கொங்கு நாட்டில் ஆதிக்கம் செலுத்தியபோது ஆனைமலை அடிமை தேசமாக மாறியது. ஆனைமலையின் கட்டுபாட்டில் 500 ஊர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பல்வேறு படையெடுப்புகளில் இதற்கான ஆவணங்கள் அழிந்து விட்டதாக தெரிகிறது. ஆனால் கும்கிகள் ஆனைமலை காட்டின் வரலாறு சுவடுகளாக வாழ்கின்றன.
