கோவையில் கள்ள நோட்டு கும்பல் கைது… 200 ரூபாய் அச்சடித்தது எப்படி…
கோவை மாநகரப் போலீசார் போதைப்பாக்கு மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று சுகுணாபுரம் பகுதியில் கரும்புக்கடை போலீசார் சோதனை செய்தபோது கரும்பு கடை பகுதியை சேர்ந்த பைசல் (37) சதாம் உசேன் (28) மற்றும் போத்தனூர் சேர்ந்து ஹக்கீம் (51) ஆகியோர் இரண்டு கிராம் மெத்தபட்டமின் போதை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.
இவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் தீவிரமாக விசாரித்த போது இவர்கள் கள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் கும்பல் என தெரியவந்தது. இதில் பைசல் பெங்களூரில் கள்ள ரூபாய் நோட்டு அடிக்கும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து 200 ரூபாய் நோட்டுகளை கள்ளத்தனமாக அச்சடித்து வந்தனர்.
இவர்களிடமிருந்து 38 ஆயிரத்து 600 ரூபாய் கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது . மேலும் ரூபாய் நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய கலர் பிரிண்டிங் மிஷின் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பைசல் கூறுகையில் ,” நான் பெங்களூரில் 6 மாதம் கள்ள ரூபாய் நோட்டு அடிக்கும் பயிற்சி பெற்றிருந்தேன்
. 500 ரூபாய் அச்சடித்தால் அதை புழக்கத்தில் விடுவது சிரமம் எனவே 200 ரூபாய் கள்ள ரூபாய் நோட்டை அச்சடித்து வயதானவர்கள் அதிக வியாபாரம் நடக்கும் பகுதிகளில் பொருட்களை வாங்கி மீதி சில்லரையாக வாங்கி பயன்படுத்தி வந்தோம். கடந்த சில நாட்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரூபாய் நோட்டுக்களை நாங்கள் புழக்கத்தில் விட்டிருந்தோம்.
நாங்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக யாரோ தகவல் தெரிவித்த காரணத்தால் மாட்டிக் கொண்டோம் என்றார். இதில் கைது செய்யப்பட்ட ஹக்கிம் என்பவர் கோவை நகரில் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய வழக்கில் ஏற்கனவே இந்த வழக்கில் இவர் சிறை தண்டனை பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வழக்கில் பவுல் உட்பட மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
