கோவையில் வீட்டு வேலைக்கு வருபவர்கள் குற்றவாளிகளா என கண்டறிய உத்தரவு…
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று மாநகரப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு டிரைவர் வீட்டு வேலை செய்யும் நபர்கள் மற்றும் செக்யூரிட்டி வேலை செய்யும் நபர்களை அனுப்பிவைக்கும் (Man Power Agency & Security) நிறுவனங்களின் மேலாளர்கள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.
இதில் போலீஸ் கமிஷனர் கண்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அனைத்து தனியார் நிறுவனங்களும் அரசின் விதிமுறைகளின்படி முறையாக பதிவு செய்யப்பட்டு அதற்குரிய சான்றிதழ் பெறவேண்டும்.
வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் ஆதார் கார்டு, ரேசன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையின் ஒரிஜினல் மற்றும் நகல்கள் பெறப்பட்டு அவற்றின் உண்மைதன்மையை சரிபார்க்க வேண்டும். இவர்களது சொந்த ஊர் அல்லது முந்தைய வசிப்பிடம் போன்றவை பெற வேண்டும்.
மேலும் வேலைக்கு சேரும் நபர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களின் அவசர தொடர்பு விபரங்கள் சேகரிக்கப்படவேண்டும். பணியில் சேர்க்கப்படும் நபர்கள் ஏற்கனவே பணியாற்றியிருந்தால், முன்பு பணியாற்றிய நிறுவனங்களிடம் இவர்களின் பணி விபரங்கள் மற்றும் நடத்தை
குறித்து விசாரிக்க வேண்டும். மேலும் முதன் முறையாக வேலைக்கு சேரும் நபர்கள் என்றால் அவர்களைப்பற்றி முழுமையாக விசாரணை செய்யப்பட வேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் காவல்துறையினரிடம் தெரிவித்து விசாரிக்கவேண்டும்.
வேலைக்கு எடுக்கும் வீட்டு உரிமையாளர்களிடம் வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் வைப்பது. விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைப்பது. இவர்களின் நடத்தை குறித்து கண்காணிப்பது போன்ற விபரங்களை கூற வேண்டும். மேலும் வீட்டில் வேலை செய்யும் நபர்களின் நடத்தையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நிறுவனத்திற்கு தெரிவிப்பதுடன், காவல் துறைக்கும் தெரியப்படுத்தவேண்டும்.
போதைப்பொருள் பயன்படுத்தும் நபர்களை எக்காரணம் கொண்டும் பணிக்கு அமர்த்தக்கூடாது.நிறுவனங்கள் பணியாளர்களின் விபரங்களை டிஜிட்டல் மயமாக்கி (Digital Database), காவல் துறையின் தேவைக்கேற்ப உடனடியாகப் பகிரும் வகையில் வைத்திருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் நபர் பிற மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவர்களின் சொந்த மாநில முகவரி, அங்குள்ள காவல் நிலைய விபரம் மற்றும் அவர்களின் ஆதார் அட்டையுடன் பாஸ்போர்ட் (இருந்தால்) அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றைத் தகுந்த ஆதாரங்களாகப் பெறப்பட வேண்டும்.
வேலைக்கு அமர்த்தப்படும் நபர்களை நிறுவனங்கள் அடிக்கடி கண்காணிப்பு செய்யப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
