கோவையில் நடைபாதை வியாபாரிகள் மடியேந்தி போராட்டம்…
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது.
இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட சாலையோர வியாபார கடை வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் கடந்த சில ஆண்டாக சாலையோர வியாபாரிகளுக்கான நலத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. மத்திய அரசு வழங்கியுள்ள நிதி எதுவும் சாலையோர வியாபாரிகளுக்கு கிடைக்கவில்லை.
நாங்கள் பலமுறை கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம். 50க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு முறையாக இடம் ஒதுக்கீடு செய்து கடை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. வியாபார தொழில் செய்பவர்களுக்கு பல்வேறு நெருக்கடி இருக்கிறது. பல கஷ்டமான சூழ்நிலையில் நாங்கள் வியாபாரம் செய்கிறோம்.
எங்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாநகராட்சியில் எங்களுக்கு உரிய உதவி செய்வதாக 300 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை வசூல் செய்தார்கள். ஆனால் அடையாள அட்டை மத்திய அரசின் நிதி உள்ளிட்ட எந்த உதவியும் எங்களுக்கு கிடைக்கவில்லை என தெரிவித்தனர். கோரிக்கையை வலியுறுத்தி மடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
