சைபர் கிரைம் மோசடி; 33 ஏஜெண்டுகள் கைது
சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில், சைபர் கிரைம் போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதன்படி சைபர் கிரைம் வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளின் உரிமையாளர்கள் மற்றும் வங்கிக் கணக்குகளைப் பெற்று சைபர் குற்றவாளிகளுக்கு வழங்கும் ஏஜென்ட்கள் ஆகியோரைக் கண்ட றிந்து, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கோவை மாநகரப் பகுதிகளில் வசித்து வரும் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்ட வங்கிக்கணக்கு உரிமையாளர்கள் மற்றும் ஏஜென்டுகள் 7 பேர் கண்டறியப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக சம்மந்தப்பட்ட சைபர் கிரைம் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும், கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுடன் தொடர்புடைய, பிற மாவட்டங்களில் வசித்து வந்த சைபர் கிரைம் குற்ற வங்கிக் கணக்கு உரிமையாளர்கள் மற்றும் ஏஜென்டுகள் பிடிபட்டனர். அவ்வாறு பிடிபட்ட 25 பேர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு 2 நாட்களில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தங்களது பெயரில் தொடங்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு விவரங்கள், செல்போன் எண்கள், வாட்ஸ்அப் எண்கள் மற்றும் சமூக வலைதளங்களின் கணக்கு உள்ளிட்ட எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் நண்பர்கள், தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் கேட்டாலும் அவர்களிடம் வழங்கக் கூடாது. இதுபோன்ற தகவல்களை மற்றவர்களிடம் வழங்கினால் அவை சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது வங்கி மற்றும் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, சைபர் குற்றங்களுக்கு துணைபோகும். வகையில் தங்களது கணக்குகள் அல்லது தனிப்பட்ட தகவல்களை பிறரிடம் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
