பாட்டில் சப்ளையர்களை மடக்குவார்களா மதுவிலக்கு போலீசார்…

கோவை நகர், புறநகரில் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மது பாட்டில் கடத்தல், மது பாட்டில்களை முறைகேடாக விற்பனை செய்தல், கள் விற்பனை தொடர்பாக விசாரித்து வழக்கு பதிவு செய்ய அதிகாரம் இருந்தது.

மதுபானம் தொடர்பான வழக்குகளில் மட்டுமே வழக்கு போட, விசாரிக்க இந்த பிரிவினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. மது விலக்கு போலீசார் மதுபானம் தொடர்பாக விசாரிக்கும் போது கஞ்சா, போதை மாத்திரை, போதை மருந்துகள் தொடர்பான தகவல்களும் கிடைப்பதாக தெரியவந்தது.

ஆனால் இது தொடர்பாக மதுவிலக்கு போலீசார் வழக்கு போடாமல் விட்டு விட்டு விடுவது வாடிக்கையாக இருந்தது. சில நேரங்களில் உள்ளூர் போலீசார் வசம் இதர வழக்கு குற்றவாளிகளை ஒப்படைத்து வந்தனர். இதற்கிடையே 2 ஆண்டிற்கு முன் தமிழக டிஜிபி அலுவலகத்தின் உத்தரவின் படி, மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கஞ்சா வழக்குகள் போட அனுமதி, அதிகாரம் வழங்கப்பட்டது.

|இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கோவை நகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கஞ்சா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போதை பொருட்கள் தடுப்பு பிரிவு போலீசார், உள்ளூர் போலீசார் மட்டுமின்றி மது விலக்கு போலீசாரும் கஞ்சா வழக்கு பதிவு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதுவும் மதுபாட்டில்கள் தொடர்பான வழக்குகளை விட, தற்போது கஞ்சா, போதை

மாத்திரை வழக்குகளில் மதுவிலக்கு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். டாஸ்மாக் கடைகள் தினமும் மதியம் 12 மணிக்கு தான் திறக்கப்படுகிறது. ஆனால் அதிகாலை நேரங்களில் சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்கிறார்கள்.

இரு சக்கர வாகனங்களில் மதுபாட்டில்களை வைத்து குடி பிரியர்களை தேடி சென்று விற்பனை செய்கிறார்கள். இந்த கும்பல் மீதான நடவடிக்கை அரிதாகி விட்டது. மாநகர், மாவட்டங்களில் மதுபாட்டில் சப்ளை தீவிரமாக இருக்கிறது. இதை தடுக்க வேண்டும், கஞ்சா, போதை மாத்திரை மட்டுமின்றி மதுபாட்டில்கள் குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க மதுவிலக்கு போலீசார் முனைப்பு காட்ட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *