போக்குவரத்து விதிமீறல் அதிகரிப்பு… 1500 பேர் லைசென்ஸ் ரத்து செய்ய திட்டம்

மாநகரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 1,498 பேரின் லைசென்ஸ் ரத்துசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் தினந்தோறும் பல ஆயிரம் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போக்குவரத்து விதிமீறல் தொடர்கிறது. இதன்காரணமாக சாலைவிபத்துகள் சர்வ சாதாரணமாக நடக்கிறது.

குறிப்பாக, அதிவேகம், சிக்னல் விதிமீறல், ஹெல்மெட் அணியாமல் செல்வது, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது போன்ற விதிமீறல்கள், சாலைவிபத்துக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

இதுபோன்ற விதிமீறல்களை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தினால் மட்டுமே சாலைவிபத்துகளை குறைக்க முடியும் என போலீசார் கருதுகின்றனர். இதற்காக, பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும்போது, அவர்கள் மீண்டும் அக்குற்றத்தில் ஈடுபட மாட்டார்கள் என்பதற்காக மாநகர போலீசார் ‘ஸ்பார்ட் பைன்’ (உடனடி அபராதம்) திட்டத்தை அன்றாடம் அமல்படுத்தி வருகின்றனர்.

ஆனாலும், பல இடங்களில், வாகன ஓட்டுனர்கள் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர் முன்பு, விதிமீறல் கண்டறியப்பட்ட இடத்திலேயே அபராத தொகை வசூலிக்கப்பட்டு, அங்கேயே ரசீது கிழித்து கொடுக்கும் நடைமுறை அமலில் இருந்தது. ஆனால், தற்போது இ-செலான் மூலம் ஆன்லைன் பேமண்ட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், பலர் அபராத தொகையை உடனடியாக செலுத்தாமல், இழுத்தடித்து வருகின்றனர். குறிப்பாக, மாநகரில் இதுநாள் வரை சுமார் 15 சதவீத வாகன ஓட்டுனர்கள் இ-செலான் மூலம் அபராத தொகையை செலுத்தாமல் சுற்றி வருகின்றனர். இதேபோல், மதுபோதையில் வாகனத்தை இயக்கிய நபர்கள் அடையாளம் கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அவர்களும் அபராத தொகையை செலுத்தாமல் இழுத்தடிக்கின்றனர்.

இதுபோன்ற நபர்கள் சுமார் 1,000-க்கும் மேற்பட்டவர்களின் டிரைவிங் லைசன்சை ரத்துசெய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் மகேஸ்வரன் கூறியதாவது: கோவை மாநகரில், வாகன போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் நபர்களுக்கு தானியங்கி கேமராக்கள் மூலமாகவும், போலீசாரின் வாகன தனிக்கை மூலமாகவும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அபராத தொகையை உடனடியாக வசூலிக்காமல், காலஅவகாசம் அளிக்கப்படுகிறது.

ஆனால், இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்தாமல் இதை பலவீனமாக கருதி, பலர் அபராத தொகையை செலுத்தாமல் உள்ளனர். இதுபோன்ற நபர்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து ரிமைண்டர் அனுப்பப்படுகிறது. ஆனாலும், கண்டுகொள்ளாமல் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுனர்கள் அலட்சியம் காட்டுகின்றனர். இவர்களிடம், கறாராக அபராத தொகையை வசூலிக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

|இந்த நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவர்களில், 1,149 பேர், 15 முறை அபராத செலான்கள் பெற்றுள்ளனர். 425 பேர், 20 முறை அபராத செவான்கள் பெற்றுள்ளனர். இவர்கள். எம்-பரிவாகன், இ-சேவை மையம், பேடிஎம் போன்ற ஆன்லைன் சேவை மூலம் அபராத தொகை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மதுபோதையில் வாகனம் ஒட்டிய நபர்கள், அதற்கான அபராத தொகையை நீதிமன்றத்தில்தான் செலுத்த முடியும். அதன்பிறகுதான் அவர்களது வாகனங்கள் விடுவிக்கப்படும். அதனால், அவர்களுக்கும் போதிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

வாகன போக்குவரத்து விதிமீறல் மற்றும் மதுபோதையில் வாகனம் ஒட்டிய நபர்கள் என இவ்விரு குற்றச்செயல்களில் அடிக்கடி ஈடுபட்ட நபர்கள் பட்டியல் தனியாக சேகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 1.498 பேரின் லைசன்ஸ்களை தற்காலிக ரத்துசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

2 thoughts on “போக்குவரத்து விதிமீறல் அதிகரிப்பு… 1500 பேர் லைசென்ஸ் ரத்து செய்ய திட்டம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *