லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி வரி விதிப்பு அலுவலர் கைது…!

கோவை காந்திமாநகரை சேர்ந்தவர் அருண்பிரசாத் ( 38).

தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் வீடு மற்றும் வணிக வளாக கட்டடம் கட்டி உள்ளார். அதற்கு வரி செலுத்துவதற்காக கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் வரி வசூலிப்பவராக பணியாற்றி வரும் தர்மராஜ் (52) என்பவரை அணுகினார்.

வீடு மற்றும் வணிக வளாகத்துக்கு மாநகராட்சியில் என்ன விதிக்கப்பட்டு உள்ளதோ அந்த வரியை செலுத்தினார். தொடர்ந்து வணிக வளாகத்துக்கு ஒரு வரிபுத்தகமும், வீட்டுக்கு மற்றொரு வரிபுத்தகமும் போடப்பட்டது.

இந்த பணிகள் முடிந்த நிலையில் அருண்பிரசாத் வடக்குமண்டல அலுவலகத்துக்கு சென்றுள்ளார் . வரிபுத்தகத்தை கொடுக்குமாறு தர்மராஜிடம் கேட்டார். அதற்கு அவர் 25 ஆயிரம் ரூபாய் ஸலஞ்சமாக கொடுத்தால்தான் அந்த புத்தகத்தை கொடுப்பேன் என கூறிவிட்டதாக தெரிகிறது.

அருண்பிரசாத் இது குறித்து கோவை மாவட்ட லஞ்சஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். போலீசார் கொடுத்த ஆலோசனையின் படி அருண் பிரசாத் ரசாயன மை தடவிய ரூபாய் நோட்டுக்களை இன்று இரவு கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் பணியில் இருந்த தர்மராஜுடம் கொடுத்தார். அப்போது அங்கே மறைந்திருந்த கூடுதல் எஸ்பி ராஜேஷ் மற்றும் போலீசார் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தர்மராஜை ஆதாரத்துடன் கைது செய்தனர். அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தர்மராஜ் சஸ்பெண்ட் செய்து கோவை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. கோவை மாநகராட்சியில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சியில் சொத்து வரி மற்றும் தொழில் வரி விதிப்பிற்கு பல ஆயிரம் ரூபாய் முதல் பல லட்ச ரூபாய் வரை லஞ்சம் அதிரடியாக வசூலிப்பதாக தொடர்ந்து புகார் வருகிறது. இந்த லஞ்ச வசூலில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. உரிய ஆதாரங்களுடன் உயர் அதிகாரிகளையும் போலீசார் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *