கோவை சென்ட்ரல் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனை செய்தனர்.
அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் இடைத்தரகர்கள் வாகனங்கள் போன்றவற்றில் போலீசார் சோதனை செய்தனர் இதில் கணக்கில் வராத சுமார் 64 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு மற்றும் தகுதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்குப் பொதுமக்களிடம் இருந்து இடைத்தரகர்கள் மூலமாகப் பெருமளவில் லஞ்சப் பணம் கைமாறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டது.
அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில்களைப் பூட்டி, வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லாதவாறு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அலுவலக வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டு உள்ள அனைத்து நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் சொகுசு கார்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
டிரைவிங் பயிற்சி பள்ளி நடத்துவோர் மற்றும் அலுவலக தொடர்பிலான பணியில் இருப்பவர்கள் புரோக்கர்களாக செயல்பட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்கித் தரும் வேலை செய்து வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் சிலர் அதிக பணம் லஞ்சமாக தினமும் குவித்து வருவது கண்டறியப்பட்டது.
இவர்களின் பணம் வாங்கும் பின்னணி கடந்த காலங்களில் வாங்கி குவித்த சொத்து மற்றும் இதர விவகாரங்கள் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அலுவலக பணியில் இருந்த சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் வட்டார போக்குவரத்து அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. போலீசார் சோதனையின் போது சிலர் அலுவலக ஜன்னல் வழியாகவும் குப்பை தொட்டியிலும் பணத்தை வீசி சென்றது தெரியவந்தது .இந்த பணம் சேகரிக்கப்பட்டது.
