பொதுப்பணித்துறை குளங்களை குத்தகைக்கு வாங்கி நாசமாக்கிய கோவை மாநகராட்சி…

கோவையில் குளங்கள் சாக்கடை பள்ளமாக மாற்றி, கரையில் ஓட்டல், கடைகள் நடத்த அனுமதி வழங்கிய மாநகராட்சியினர் மீது பொதுப்பணித்துறை நிர்வாகம் அதிருப்தியில் இருக்கிறது.

கோவை மாவட்டத்தில் 32 குளங்கள், 20 தடுப்பணை இருந்தது. இதில் கடந்த 20 ஆண்டிற்கு முன் அம்மன் குளம், மண்ணரை குளம் உட்பட 4 குளங்கள் பயன்பாடின்றி அழிந்து போனது. சில குளங்களின் நீர் தேக்க பரப்பு குறைந்து வருகிறது.

38 ஏக்கர் பரப்பிலான அம்மன் குளம் பொதுப்பணித்துறை வசம் இருந்து நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் வசம் ஒப்படைக்கபட்டு, அங்கே 2,350 வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீர் தேக்க குளம் என்ற அடையாளத்தை அம்மன் குளம் இழந்து விட்டது. செல்வாம்பதி குளத்தின் வடக்கு கரையில் 24 ஏக்கர் நிலம், 99 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் 23 ஆண்டிற்கு முன் நுகர்பொருள் வாணிப கழகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலத்தை திரும்ப பெற பொதுப்பணித்துறை நிர்வாகம் முடிவு செய்தது. குத்தகை காலத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி எடுத்தது. ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில் செல்வாம்பதி, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, முத்தண்ண குளம், செல்வசிந்தாமணி, உக்கடம் பெரியகுளம் வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம் போன்றவற்றை மேம்பாட்டு பணி செய்வதாக கூறி பொதுப்பணித்துறை நிர்வாகம் வசம் இருந்து.

கடந்த 2008ம் ஆண்டில் மாநகராட்சி நிர்வாகம் 99 ஆண்டு குத்தகை என்ற பெயரில் வசப்படுத்தியது. 40 ஆண்டிற்கு முன் குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்ட உக்கடம் பஸ் டிப்போவும், வாலாங்குளத்தின் கரையில் 15 ஆண்டிற்கு முன் மின் வாரியத்திற்கு ஒப்படைக்கப்பட்ட இடமும் மீட்கப்படவில்லை.

3.5 ஏக்கர் பரப்பிலான இந்த இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 100 மேகாடி ரூபாய் வாலாங்குளத்தின் கிழக்கு பகுதியில் 1 ஏக்கர் நிலம், சுங்கம் பஸ் டெப்போவின் பிடிக்கு சென்று விட்டது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பெரியகுளம், வாலாங்குளம், முத்தண்ண குளம், செல்வசிந்தாமணி குளங்களின் கரைகளில் ஓட்டல்கள், ஐஸ்கிரீம், சாலட் கடைகள், பொழுது போக்கு கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. குளங்களை சீரமைத்து அதன் கரைகளை பாதுகாக்க, பொதுப்பணித்துறை வசம் இருந்து மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் குளக்கரைகளை வணிக நோக்கத்திற்காக வாடகைக்கு விட்ட மாநகராட்சியின் செயல்பாடு பொதுப்பணித்துறைக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. நகரின் மொத்த கழிவுகளையும் குளங்களுக்கு திருப்பி விட்டு வேடிக்கை பார்க்கிறது. குளங்களில் உள்ள நீர் அனைத்தும் ஆகாய தாமரையின் அழுகி போன கழிவால் பச்சை நிறமாக மாறி விட்டது.

குளக்கரையில் நின்ற கெட்ட வாடையால் வாந்தி மயக்கம் ஏற்படும் அளவிற்கு அவலமான நிலை உருவாகி விட்டது. இதற்கு எல்லாம் மாநகராட்சியின் அலட்சிய செயல்பாடு தான் காரணம் என பொதுப்பணித்துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர் இது மட்டுமின்றி குளக்கரைகளை ஷூட்டிங் ஸ்பாட் என அறிவித்து.

திருமண போட்டோ, வீடியோ பதிவு, சினிமா, ஷார்ட் பிலிம் ஷூட்டிங் கட்டணம் விதித்து வசூலிப்பதும் பொதுப்பணித்துறை வட்டாரத்தில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சியின் பிடியில் உள்ள குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்ய வேண்டும். குளங்களை ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் குளங்களை சாக்கடை பள்ளமாக மாற்றி விடுவார்கள் என பொதுப்பணித்துறையினர் கவலை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *