ஓவர் லோடு: 33 லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் கனிம பொருட்கள் கொண்டு செல்வதில் விதிமுறை மீறல் இருப்பதாக புகார் வந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று இரவு மாநகர் மற்றும் மாவட்டத்தில் போலீசார் ஒருங்கிணைந்த சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஒரே நாளில் 33 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மணல், கிராவல், ஜல்லி உள்ளிட்ட கனிமப் பொருட்களை அதிக எடையில் விதிமுறை மீறி கொண்டு சென்றது தெரியவந்தது.

இந்த வாகனங்களை பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தி வைத்தனர். லாரிகளில் மூன்று யூனிட் குறைவாக கனிமப் பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் பெரும்பாலான வாகனங்களில் ஐந்து யூனிட்டுக்கும் அதிகமாக கனிமங்கள் கொண்டு செல்லப்பட்டது.

இதன் அடிப்படையில் இந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.கனிமங்களை முறைகேடாக எடுத்து சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை பர்மிட் இல்லாமல் வாகனங்களில் கனிம பொருட்களை கொண்டு சென்றதாக கனிமவளத்துறை மற்றும் வருவாய்த்துறை மூலமாக 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

கேரளாவில் இருந்து கோவைக்கு மணல் கடத்தி வந்த 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 33 வாகனங்கள் கோர்ட்டு நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாக 122 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

3 மாதத்தில் 155 வாகனங்கள் மீது நடவவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கனிம வளம் மற்றும் வருவாய்த்துறையினர் கூறுகையில், “பர்மிட் இல்லாமல் யாரும் கனிமப் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல கூடாது.

அப்படி பொருட்களை கொண்டு சென்றால் வெறும் அபராத நடவடிக்கை மட்டும் அல்ல குற்றவியல் நடவடிக்கையாக கருதி கோர்ட்டில் ஒப்படைத்து உரிய விசாரணை நடத்தப்படும். ஓவர் லோடாக கனிமங்களை வாகனங்களில் கொண்டு செல்லக்கூடாது. உரிய எடை அளவிற்கு மட்டுமே கனிமங்களை அந்த வாகனங்களை கொண்டு செல்ல வேண்டும்.

சிலர் அதிக எடையில் வாகனங்களில் பொருட்களை கொண்டு செல்கிறார்கள்.

இது விபத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துவிடும்.அனைத்து கல்குவாரி மற்றும் கிரசர்களுக்கு கனிம் பொருட்களை உரிய எடையில் மட்டுமே அனுப்ப வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.

பொதுமக்களும் உரிய எடையில் பொருட்களை வாங்க வேண்டும். வரும் நாட்களில் பர்மிட் மற்றும் ஓவர் லோடு தொடர்பாக தொடர்ந்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். ” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *