ஆவின் ஆப் வேண்டாம்… ஏஜென்டுகள் மறியல் போராட்டம்
கோவையில் ஆவின் செயலி பயன்பாட்டை கட்டாயப்படுத்தும் கோவை மாவட்ட ஆவின் நிர்வாகத்தை கண்டித்து, ஆவின் முகவர்கள் தடாகம் ரோட்டில் உள்ள ஆர்எஸ்புரம் ஆவின் அலுவலகம் முன்பு இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை ஒன்றியம் ஆவின் முகவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகையை, நாளை முதல் தினமும் ஆவின் செயலி மூலமாகவே வழங்க வேண்டும் என ஆவின் நிர்வாகம் கட்டாயப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவால்,
தங்களுக்கு பொருளாதார ரீதியாக பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாக முகவர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
மேலும், தற்போது நடைமுறையில் உள்ள ஆவின் செயலியில் ஏராளமான தொழில்நுட்பக் குளறுபடிகள் இருப்பதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் முகவர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .இதே போன்ற தொழில்நுட்பக் குளறுபடிகள் காரணமாக, அண்டை மாவட்டமான நீலகிரியில் இந்த செயலி பயன்பாடு ஏற்கனவே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கோவையில் உள்ள ஆவின் பொதுமேலாளர் இந்தச் செயலியை முகவர்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் எனத் தொடர்ந்து வற்புறுத்தி வருவதாக கூறி முகவர்கள் தடாகம் ரோட்டில் உள்ள ஆர்எஸ்புரம் ஆவின் நிறுவனம் முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் ஆவின் பொதுமேலாளர் எங்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும், முகவர்களுக்கு கமிஷன் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்ய கூடாது எனவும் வலியுறுத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அதிகாரியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து முகவர்கள் கூறுகையில், ” ஆவின் செயலியின் குளறுபடிகள் குறித்து ஆவின் பொதுமேலாளரிடம் முகவர்கள் தரப்பில் ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், முகவர்களின் எவ்விதமான ஆலோசனையும் செய்யாமல் தன்னிச்சையாக அதிகாரிகள் முடிவு எடுத்து.
நாளை (1-ம் தேதி) முதல் செயலி மூலமாக மட்டுமே பணம் செலுத்த வேண்டும் எனவும், கமிஷன் தொகையை கழித்து விட்டு பணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளனர் தவிர, ஆவின் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யும் பாலுக்கு கமிஷன் இல்லை என கூறி உள்ளனர்.
ஆவின் நிர்வாகத்தின் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த செயலி முறையை ரத்து செய்ய வேண்டும். பழைய முறையிலான நடவடிக்கை இருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
