திமுக நிர்வாகியின்‌ எப் எல் 2 பார் மூடி சீல் வைப்பு…!

கோவை மாவட்டத்தில் எப்எல், எப்எல்3 உரிமம் பெற்று 118 பார்கள் செயல்படுகிறது.

மாவட்ட அளவில் 229 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ள நிலையில் பாதிக்கு பாதியாக தனியார் பார்கள் துவங்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில தனியார் பார்களில் டாஸ்மாக் கடைகள் போல் மதுபான பாட்டில்களை தாராளமாக விற்பனை செய்து வருவதாக தெரியவந்தது.

குறிப்பாக மதுக்கரை ரோடு குறிச்சி பேஸ் 2 பகுதியில் திமுக நிர்வாகி பிரபாகரனின் மனமகிழ் மன்ற பார் ஒன்றில் அதிக விதிமுறை மீறல் கண்டறியப்பட்டது. 2 ஏக்கர் பரப்பில் குடில் அமைத்து, பெரிய பார் கூடம் அமைத்து பிரமாண்டமாக இங்கே பார் உருவாக்கப்பட்டிருந்தது.

இங்கே மதுபானங்கள் 20 ரூபாய் முதல் 30 ரூபாய் கூடுதல் விலையில் விற்கப்பட்டதாக புகார் கிடைத்தது. இதை தொடர்ந்து கலால் துறையினர் அதிரடி சோதனை செய்து இந்த எப்எல்2 உரிமம் பெற்ற பாரை மூடி சீல் வைத்தனர். இந்த நிலையில், மாவட்ட அளவில் எப்எல் உரிமம் பெற்ற பார் உரிமையாளர்களுடன் மாவட்ட கலால் துறையினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

கலால் துறை துணை கமிஷனர் சாதனைகுரல் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், தனியார் பார்களில் உரிய விதிகளின் படி செயல்பட வேண்டும். கிளப் உறுப்பினர் அல்லாத நபர்களுக்கு மதுபாட்டில்கள் வழங்க கூடாது. மீறினால் பார்களை மூடி சீல் வைத்து விடுவோம். லைசென்ஸ் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்தனர்.

மாவட்ட அளவில் தனியார் பார்கள் நேர விதிகளை மீறுவதாக தெரிகிறது. இரவு 11 மணிக்கு பிறகு தனியார் பார்கள் மூடப்படாவிட்டால் சீல் வைக்கப்படும். பொதுமக்கள் தனியார் பார்களின் விதிமீறல் தொடர்பாக கலால் துறையினருக்கு புகார் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *