காண்டா மிருகம் கான மயிலை காக்க வனத்துறை அமைச்சகம் திட்டம்
கோவையில் ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழுவின் 91-வது கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேசியதாவது: இந்தியாவின் சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் வனவிலங்கு பாதுகாப்பு மிக முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் போது அறிவியல் திட்டமிடல், விலங்குகளின் வாழ்விட இணைப்பை பாதுகாத்தல் மற்றும் பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
தொழில்நுட்ப ஆய்வுகள், சமூக ஆய்வுகள் மற்றும் பாரம்பரிய அறிவை ஒருங்கிணைத்த தீர்வு சார்ந்த கொள்கை நடவடிக்கைகள் வனவிலங்கு பாதுகாப்பில் அதிக கவனம் பெற வேண்டும். ஒற்றை கொம்பு இந்திய காண்டாமிருகத்தின் நீண்டகால பாதுகாப்புத் திட்டம், காண்டாமிருக டிஎன்ஏ குறியீட்டு அமைப்பின் அடிப்படையிலான பாதுகாப்பு நடவடிக்கைகள்,
கிரேட் இந்திய பஸ்டார்டு (கானமயில்) இனத்தின் எதிர்கால பாதுகாப்பு உத்தி மற்றும் பிக்மி ஹாக் என்ற காட்டுப்பன்றி இனத்தை இனமீட்பு திட்டத்தில் சேர்ப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அச்சுறுத்தலுக்கு உள்ளான பல்வேறு வனவிலங்கு இனங்களுக்கான பாதுகாப்பு திட்டங்களின் முன்னேற்றமும் ஆய்வு செய்யப்பட்டது. காண்டாமிருகம், தேன் கரடி மற்றும் கிரேட் இந்திய பஸ்டார்டு தொடர்பான முக்கிய அறிவியல் வெளியீடுகளும் கூட்டத்தில் வெளியிடப்பட்டன.
இதில், நாடு முழுவதும் இருந்து வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனுமதி பெற வேண்டிய நூற்றுக்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்ட முன்மொழிவுகளையும் நிலைக்குழு பரிசீலனை செய்தது.
சுற்றுச்சூழல் பாதிப்பு, பொதுமக்கள் நலன், தேசிய வளர்ச்சிக்கான அவசியம் மற்றும் வனவிலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டன.
வனவிலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பதோடு, நாட்டின் நிலையான வளர்ச்சியையும் முன்னெடுத்துச்செல்ல ஒன்றிய அரசு உறுதி எடுத்து இருப்பதாக நிலைக்குழு தெரிவித்தது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சி திட்டங்கள், வனவிலங்குகளுக்கும் அவற்றின் வாழ்விடங்களுக்கும் குறைந்தபட்ச பாதிப்பு ஏற்படும் வகையில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மற்றும் பிற சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செயல்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
